2013-02-21 15:26:04

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வத்திக்கானில் செலவிடும் இறுதி நாள் நேரடி ஒளிபரப்பு


பிப்.21,2013. பிப்ரவரி 28, வருகிற வியாழன், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வத்திக்கானில் செலவிடும் இறுதி நாள் என்பது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்பதால் அன்று திருத்தந்தை மேற்கொள்ளும் அனைத்து நிகழ்வுகளையும் உலக மக்கள் காணும்படி, அவற்றை ஒளிப்பதிவு செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று வத்திக்கான் தொலைக்காட்சி நிறுவன இயக்குனர் கூறினார்.
பிப்ரவரி 28ம் தேதி மாலை 5 மணி முடிய திருத்தந்தை கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்ய 26 காமிராக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று தொலைக்காட்சி நிறுவன இயக்குனர் பேரருள் தந்தை Edoardo María Viganó கூறினார்.
திருத்தந்தையின் தனிமனித சுதந்திரத்திற்கு எவ்வகையிலும் பாதிப்பை உருவாக்காத வண்ணம் இந்த முக்கிய நிகழ்வு பதிவு செய்யப்படும் என்றும், இதனைக் காண உலக மக்கள் பலரும் ஆவலாக இருப்பதை உணர முடிகிறது என்றும் அருள்தந்தை Viganó எடுத்துரைத்தார்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க நாளை பிற்காலத்தில் ஆய்வு செய்பவர்களுக்கும், வரலாற்று ஆர்வலர்களுக்கும் பயன்படும் என்ற எண்ணத்தில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றும் அருள்தந்தை Viganó விளக்கம் அளித்தார்.
பிப்ரவரி 28ம் தேதி, வியாழனன்று மாலை 5 மணி அளவில் வத்திக்கானில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தோல்ஃபோவை அடைந்ததும், அங்கு, அல்பானோ மறைமாவட்டத்தின் ஆயர் Marcello Semeraro வும், அந்நகர மக்களும் திருத்தந்தையை வரவேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.