2013-02-18 15:37:59

வாரம் ஓர் அலசல் – தனித்துவமிக்க திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


பிப்.18,2013 RealAudioMP3 . ஒருநாள் அதிகாலைப் பொழுதில் கண்விழித்தபோது உலகமே மஞ்சள் நிறத்துக்கு மாறிப் போயிருந்தது. மனிதர்கள், விலங்குகள், பறவைகள், பொருட்கள் அனைத்துமே மஞ்சள் நிறமாக இருந்தன. ஆனால் ஒரேயொரு பஞ்சவர்ணக்கிளி மட்டும் தன் நிறத்தை மாற்றிக் கொள்ளவில்லை. உலகமே அதைப் பார்த்து அதிசயித்தது. அந்தக் கிளி இருந்த இடம் சுற்றுலாத் தலமானது. கட்டணமும் வசூலிக்கப்பட்டது. பயணிகள் கூட்டம் கூட்டமாகப் பார்க்கச் சென்றனர். எதிரி நாடுகள் அந்தக் கிளியைக் கடத்திச் செல்வதற்குத் திட்டமிட்டன. சில வாரங்களுக்குப் பின்... உலகில் அனைத்துமே சிவப்பு நிறத்துக்கு மாறின. ஆனால் பஞ்சவர்ணக்கிளி மட்டும் தன் நிறத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அதனால் அதன் பெருமை கூடியது. இன்னும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. சில வாரங்கள் சென்ற பின்னர், அனைத்தும் தங்களது இயல்பான நிறத்துக்கு மாறின. ஆனால் அந்தக் கிளி மட்டும் தனது இயல்பான நிறத்திலே இருந்தது. உலகமே இந்தக் கிளியின் தனித்தன்மையைப் பாராட்டியது. நிறம் மாறாத கிளி என்ற பட்டத்தையும் அது பெற்றது. தலையையே இழந்தாலும் தனித்துவத்தை இழக்கக் கூடாது, அப்போதுதான் மதிப்புத் தேடிவரும் என்று சொல்வார்கள். ஆம் அன்பு நேயர்களே, நான் நானாகவும், நீங்கள் நீங்களாகவும் வாழும்போது மதிப்பு நம்மைத் தேடி வரும்.
ஒருவர் தனது தனித்துவத்தை இழக்காமல் வாழும்போது, அவர் தனது தனித்துவத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தும்போது, அவருக்கு அனைவரின் மதிப்பு தானாகத் தேடிவருகின்றது என்பதை இந்நாள்களில் உரோமையில் கண்கூடாகக் காண முடிகின்றது. இந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி உரோம் நேரம் முற்பகல் 11.30 மணிக்குப்பிறகு இந்நாள்வரை, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு, உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் குவியும் பாராட்டுக்களும், புகழ்மாலைகளும், நன்றிகளும், அவரது தனித்துவத்துக்கு கிடைக்கும் உயர்மதிப்பு என்றுதான் எண்ண வைக்கின்றது. திருத்தந்தையின் இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையைக் கேட்பதற்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர். உரோம் மாநகரின் மேயர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். “திருத்தந்தையே உமக்கு நெஞ்சார்ந்த நன்றி, உம்மை நாங்கள் அன்பு செய்கின்றோம்” என்று எழுதப்பட்ட பெரிய விளம்பரத் துணிகளை உயர்த்திப் பிடித்து நீண்டநேரம் பலமாய்க் கைதட்டி மக்கள் தங்களது நன்றிகளையும், திருத்தந்தைமீது கொண்டிருக்கும் நன்மதிப்பையும் தெரிவித்தனர். திருத்தந்தையும் நன்றி.. நன்றி.. என்றுதான் சொன்னார்.
RealAudioMP3 திருத்தந்தை 16ம் பெனடிக்ட், 120 கோடிக் கத்தோலிக்கரின் தலைவராக எட்டு ஆண்டுகளே பணி செய்திருக்கின்றார். இவர் தனது ஆயுள்காலம் முழுவதும் கத்தோலிக்கரின் தலைவராகப் பதவியில் இருக்கலாம். அதற்குத் திருஅவைச் சட்டமும் அனுமதிக்கின்றது. ஆயினும், தனது உடல்நிலை, வயது ஆகியவற்றைக் காரணம்காட்டி இப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். திருஅவை வரலாற்றில் இப்படிப் பதவியிலிருந்து விலகும் முதல் திருத்தந்தை அல்ல இவர். ஆயினும் இவரது பதவி விலகல் அறிவிப்பு அனைத்து அரசியல், சமய மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. திருஅவை வரலாற்றில், திருத்தந்தை புனித Pontian என்பவர் கி.பி.235ம் ஆண்டில் பதவியிலிருந்து விலகினார். ஏனெனில் புனித Pontian கைது செய்யப்பட்டு, இத்தாலியின் சர்தீனியாத் தீவிலுள்ள சுரங்கங்களில் வேலை செய்ய அனுப்பப்பட்டார். எனவே, உரோம் திருஅவை தலைவரின்றி இருப்பதைத் தவிர்க்கும் நோக்கத்தில் இவர் பதவி விலகி புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட வழி அமைத்தார். பின்னர் 530களில் புனித திருத்தந்தை சில்வேரியுஸ் போன்றவர்கள் பதவி விலகுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். திருத்தந்தை சில்வேரியுஸ் பதவி விலக மறுத்ததால், பட்டினிபோடப்பட்டார். அதிலே இறந்தார். பின்னர் 1040களில் திருத்தந்தை 9ம் பெனடிக்ட் பதவி விலகினார். ஆனால் அவர் மீண்டும் பதவியைக் கைப்பற்ற முயற்சித்தார். பின்னர் 1294ம் ஆண்டில் புனித திருத்தந்தை பீட்டர் செலஸ்டின் பதவி விலகினார். இத்திருத்தந்தை புனித வாழ்வில் சிறந்து விளங்கியவர். ஏறக்குறைய ஐந்து மாதங்கள் மட்டுமே திருத்தந்தைப் பொறுப்பை வகித்த செலஸ்தீன், தானாகவே முன்வந்து திருத்தந்தைப் பணியைத் துறந்ததற்காக வரலாற்றில் நினைவுகூரப்படுகிறார். இதற்குப் பின்னர் 1415ம் ஆண்டில் திருத்தந்தை 12ம் கிரகரி பதவி விலகினார். அக்காலத்தில் ஏற்கனவே ஓர் எதிர் திருத்தந்தை 13ம் பெனடிக்ட் இருந்தார். திருஅவையில் ஒன்றிப்பை ஏற்படுத்த தன்னால் இயலவில்லை என்ற காரணத்தால் திருத்தந்தை 12ம் கிரகரி பதவி விலகியதாகச் சொல்லப்படுகிறது. இது நடந்த 598 ஆண்டுகளுக்குப் பிறகு, இம்மாதம் 28ம் தேதி உரோம் நேரம் இரவு 8 மணிக்கு பதவி விலகுவதாக அறிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இவரின் இந்த அறிவிப்பு, ஆறு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் திருஅவையில் நடக்கும் நிகழ்வாக இருக்கின்றது. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் இந்த அறிவிப்புக்குப் பின்னர் நாடு, மதம், மொழி என்ற வேற்றுமையின்றி அனைத்துத் தலைவர்களும் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இது ஒரு துணிச்சலான முடிவு, ஓர் ஆழமான ஆன்மீக மனிதரால்தான் இந்த முடிவை எடுக்க முடியும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தான் வகித்துவந்த பாப்பிறைப் பதவியை, அதிகாரமாகப் பார்க்காமல் அதை ஒரு மறைப்பணியாகவே நோக்கி வந்தார், இவர் தாழ்ச்சியுள்ளவர் என்றெல்லாம் பாராட்டி வருகின்றனர். இவையெல்லாம் இவரது தனித்துவத்துக்குக் கிடைக்கும் வெகுமதிகள். இவர் வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும் திருத்தந்தையாக இருப்பார் என்றும் போற்றப்பட்டு வருகிறார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் திருமுழுக்குப் பெயர் ஜோசப் அலாய்சியஸ் இராட்சிங்கர். இவர் 1927ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி புனித சனிக்கிழமையன்று காலை 8.30 மணிக்கு ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் Marktl என்ற ஊரில் பிறந்தார். இராட்சிங்கருடன் பிறந்தவர்கள் இரண்டு பேர். அண்ணன் ஜார்ஜ் இராட்சிங்கரும் குருவானவர். அக்கா மரியா இராட்சிங்கர் காவல்துறை அலுவலகர். இவர், திருமணமாகாமல் இருந்து 1991ம் ஆண்டில் இறந்துவிட்டார். அக்காலத்திய ஜெர்மனியின் சட்டப்படி, சிறுவர்கள் 14வது வயதில் ஹிட்லரின் இளையோர் அமைப்பில் சேர வேண்டும். அதனால் ஜோசப் இராட்சிங்கரும், 1941ம் ஆண்டில் இவ்வமைப்பில் வேண்டாவெறுப்புடன் சேர்ந்தார். பின்னர் குருவாகும் ஆசையில், 1943ம் ஆண்டில் குருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அச்சமயம், ஜெர்மன் விமானப்படையில் சிறார் படைவீரராகக் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டார். அப்படையிலிருந்து விலகி சொந்த ஊருக்கு வந்தபோது, இராட்சிங்கரின் ஊரில் இராணுவ முகாமை அமைத்திருந்த அமெரிக்கப் படைவீரர்களின் முகாமில் சில மாதங்கள் இவர் இருக்க வேண்டியதாயிற்று. பின்னர், 1945ம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் முடிந்த சமயத்தில் இராட்சிங்கர் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் அதே ஆண்டில் மீண்டும் குருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அவரது அண்ணனும் சேர்ந்தார். இருவரும் 1951ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி குருக்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டனர்.
“புனித அகுஸ்தீனின் திருஅவைக் கோட்பாட்டில் மக்களும் இறைஇல்லமும்” என்ற தலைப்பில் ஆய்வு செய்து 1953ம் ஆண்டில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார் அருள்பணி ஜோசப் இராட்சிங்கர். இவர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுவதற்கு மற்றுமொரு முனைவர் பட்டம் தேவைபட்டதால், புனித பொனவெந்தூர் குறித்து ஆய்வு செய்து 1957ம் ஆண்டில் இரண்டாவது முனைவர் பட்டம் பெற்றார். 1958ம் ஆண்டில் Freising கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்தார். 1959ம் ஆண்டில் Bonn பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். “கடவுள் நம்பிக்கையும், மெய்யியல் கடவுளும்” என்ற தலைப்பில் அங்கு அவர் தனது முதல் சொற்பொழிவை நிகழ்த்தினார். பின்னர் 1963ம் ஆண்டில் Munster பல்கலைக்கழகத்தில் பணியைத் தொடர்ந்தார். 1962ம் ஆண்டு முதல் 1965ம் ஆண்டுவரை இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில், இளம் குருவாக இவர் ஆற்றிய பணி பலரால் பெரிதும் பாராட்டப்பட்டது. பின்னர் Regensburg பல்கலைக்கழகத்தில் உதவித் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது 1977ம் ஆண்டில் Munich-Freising உயர்மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்டார். “உண்மையின் உடன்உழைப்பாளர்கள்” என்ற விருதுவாக்குடன் தனது பேராயர் பணியைத் தொடங்கினார் பேராயர் ஜோசப் இராட்சிங்கர். அதே ஆண்டு ஜூன் 27ம் தேதி, திருத்தந்தை 6ம் பவுல், பேராயர் இராட்சிங்கரை கர்தினாலாக உயர்த்தினார். 1981ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி, முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால், இவரை, திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத் தலைவராக நியமித்தார். திருத்தந்தை 2ம் ஜான் பாலுக்கு மிகவும் நெருக்கமானவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் இறுதிவரைப் பணியாற்றியவர் கர்தினால் இராட்சிங்கர். திருப்பீடத்தில் கர்தினால்கள் அவைத் தலைவராக இருந்த கர்தினால் ஜோசப் இராட்சிங்கர், 2005ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதியன்று திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் இறுதி அடக்கச் சடங்குத் திருப்பலியை நிகழ்த்தியவர்.
கர்தினால் ஜோசப் இராட்சிங்கர், 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி தனது 78வது வயதில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருஅவையின் 265வது திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற கர்தினால் ஜோசப் இராட்சிங்கர், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் என்ற பெயரையும் தேர்ந்து கொண்டார். திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு, ப்ரெஞ்ச், இத்தாலியம், ஆங்கிலம், இஸ்பானியம், போர்த்துக்கீசியம், கிரேக்கம், எபிரேயம் ஆகிய மொழிகள் நன்கு தெரியும். இவர் பல அனைத்துலக விருதுகளைப் பெற்றிருப்பவர், ஒரு நல்ல மனிதர், பழகுவதற்கு இனியவர், சிறந்த இறையியல் வல்லுனர். கொள்கைப்பிடிப்புள்ளவர். இறைவனில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். பாப்பிறைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த பின்னரும், மிகவும் அமைதியோடு அன்றாடப் பாப்பிறைப் பணிகளைச் செய்து வருகிறார் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி சொல்லியுள்ளார். இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில்கூட.....
வாழ்வின் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கும் நேரங்களில், நமது சுயநலம் சொல்வதையா அல்லது கடவுள் சொல்வதையா, எதைக் கேட்பது என்ற குழப்பத்தில் இருப்போம். தீய ஆவி, நமது புனித வாழ்வுக்கு எதிராக இருந்து, கடவுளிடமிருந்து நம்மைத் திசை திருப்ப எப்போதும் முயற்சிக்கிறது. கிறிஸ்து பாலைவனத்தில் நோன்பிருந்து, செபித்து, சாத்தானால் சோதிக்கப்பட்டதை இன்று நாம் தியானிக்கிறோம். தவக்காலத்தைத் தொடங்கியிருக்கும் நாம், நமது பலவீனங்களை எதிர்த்துப் போராட கிறிஸ்துவிடம் சக்தியைக் கேட்போம். இந்நாள்களில் நீங்கள் எனக்குக் காட்டும் ஆதரவுக்கும் செபத்துக்கும் மிக்க நன்றி. கடவுள் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக....
RealAudioMP3 என்று சொன்னார். வத்திக்கான் வானொலி நேயர்களாகிய நாமும் திருத்தந்தையின் அருள்மொழிகளால் மிகுந்த பலன் அடைந்துள்ளோம். அவருக்கு உளமார நன்றி சொல்வோம். திருத்தந்தையே இந்நாள்களில் சொல்லி வருவது போல, அவருக்காகவும் புதிய திருத்தந்தைக்காகவும் செபிப்போம். அவரின் துணிச்சலான தனித்துவத்தைப் போற்றுவோம்.







All the contents on this site are copyrighted ©.