2013-02-18 15:31:31

திருத்தந்தை : தவக்காலம் ஆன்மீகப் போராட்டத்தின் காலம்


பிப்.18,2013. தீய ஆவி, இயல்பாகவே, நமது புனித வாழ்வுக்கு எதிராகச் செயல்படுகிறது மற்றும் கடவுளின் வழியிலிருந்து நம்மைத் திசை திருப்ப முயற்சிக்கிறது என்பதால், தவக்காலம் எப்போதும் ஒரு போரட்டத்தை உள்ளடக்கியதாகவே இருக்கின்றது என, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை, தவக்காலம் ஆன்மீகப் போரட்டத்தின் காலம் என்பதால், ஒவ்வோர் ஆண்டின் தவக்கால முதல் ஞாயிறின் நற்செய்தி வாசகம், இயேசு பாலைநிலத்தில் சோதிக்கப்பட்ட நிகழ்வோடு தொடர்புடையதாய் இருக்கின்றது என்று கூறினார்.
இயேசு தமது பொதுவாழ்வைத் தொடங்குவதற்கு முன்னர், சாத்தான் அவரிடம் பரிந்துரைத்த மெசியா குறித்த போலி உருவங்களை அவர் புறக்கணிக்க வேண்டியிருந்தது என்றுரைத்த திருத்தந்தை, இச்சோதனைகள், மனிதரின் போலி உருவங்கள் எனவும், இவை எப்பொழுதும் மனச்சான்றை வலுவிழக்கச் செய்கின்றன, நன்மையானதைக்கூட ஏமாற்றுகின்றன எனவும் கூறினார்.
இச்சோதனைகளின் மையமே, வெற்றிக்கு அல்லது உலகப் பொருள்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, மிகவும் கீழ்த்தரமான முடிவுகளுக்காகக் கடவுளைப் பயன்படுத்துவதாக இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.
இயேசு அவரது வெற்றியை நமக்குக் கொடுப்பதற்காக நமது சோதனைகளை அவர் எடுத்துள்ளதால், தீய ஆவிக்கு எதிராகப் போராடுவதற்கு நாம் பயப்படத் தேவையில்லை என்றும் திருத்தந்தை கூறினார்.
தவக்காலம் மனமாற்றம் மற்றும் தபத்தின் காலம் என்றுரைத்தத் திருத்தந்தை, நமது மற்றும் திருஅவையின் வாழ்வுக்கு முக்கியமான, கடவுள் மீதான நமது நம்பிக்கையை மீண்டும் கண்டுணருவதற்கு ஏற்ற காலம் என்று தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.