2013-02-18 15:33:21

திருத்தந்தை : இந்நாள்களில் மக்கள் காட்டும் ஆதரவுக்கும் செபத்துக்கும் மிக்க நன்றி


பிப்.18,2013. இம்மாதம் 28ம் தேதியிலிருந்து தனது பாப்பிறைப் பதவியிலிருந்து விலகுவதாக, திருத்தந்தை அறிவித்த பின்னர் இடம்பெற்ற இந்த முதல் ஞாயிறு மூவேளை செப உரையில் உரோம் மாநகரின் மேயர் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
“திருத்தந்தையே உமக்கு நெஞ்சார்ந்த நன்றி, உம்மை நாங்கள் அன்பு செய்கின்றோம்” என்று எழுதப்பட்ட பெரிய விளம்பரத் துணிகளை உயர்த்திப் பிடித்து நீண்டநேரம் பலமாய்க் கைதட்டி தங்களது நன்றிகளையும், திருத்தந்தைமீது கொண்டிருக்கும் நன்மதிப்பையும் மக்கள் தெரிவித்தனர். திருத்தந்தையும் நன்றி.. நன்றி.. என்று கூறினார்.
இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் பல மொழிகளில் விசுவாசிகளுக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்த திருத்தந்தை, கிறிஸ்து பாலைநிலத்தில் நோன்பிருந்து, செபித்து, சாத்தானால் சோதிக்கப்பட்டதை இன்று நாம் தியானிக்கிறோம். தவக்காலத்தைத் தொடங்கியிருக்கும் நாம், நமது பலவீனங்களை எதிர்த்துப் போராட கிறிஸ்துவிடம் சக்தியைக் கேட்போம். இந்நாள்களில் நீங்கள் எனக்குக் காட்டும் ஆதரவுக்கும் செபத்துக்கும் மிக்க நன்றி. கடவுள் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக என்று கூறினார்.
இஞ்ஞாயிறு மாலை 6 மணிக்கு ஆண்டுத் தியானத்தைத் தொடங்கியுள்ள திருத்தந்தை, வருகிற சனிக்கிழமை காலையில் அதனை முடிப்பார். திருப்பீட கலாச்சார அவைத் தலைவரான கர்தினால் ஜான்பிராங்கோ இரவாசி, இந்த ஆண்டுத் தியானச் சிந்தனைகளை வழங்குகிறார். திருத்தந்தையோடு திருப்பீடத் தலைமையகத்திலுள்ள கர்தினால்களும் தியானம் செய்கின்றனர்.








All the contents on this site are copyrighted ©.