2013-02-18 15:31:51

கற்றனைத்தூறும்..... அனைத்துலக செஞ்சிலுவை சங்கம்


1859ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி, ப்ரெஞ்ச் பேரரசர் 3ம் நெப்போலியனின் இராணுவம், சர்தீனிய அரசர் 2ம் விக்டர் இம்மானுவேலின் இராணுவத்துடன் கூட்டுச்சேர்ந்து, ஆஸ்திரியப் பேரரசர் முதலாம் Franz Josephன் இராணுவத்துக்கு எதிராக Solferino என்ற இடத்தில் போரிட்டது. பேரரசர்களின் தலைமையில் வரலாற்றில் இடம்பெற்ற பெரிய போர் இதுவெனச் சொல்லப்படுகிறது. இதில் ஏறக்குறைய 3 இலட்சம் படைவீரர்கள் போரிட்டனர். ஏறக்குறைய 9 மணி நேரங்கள் நடைபெற்ற இந்தப் போரில் 3,000 ஆஸ்ட்ரியப் படைவீரர்களும், எதிர்தரப்பில் 2,492 படைவீரர்களும் கொல்லப்பட்டனர். மேலும், 10,807 ஆஸ்ட்ரியப் படைவீரர்களும், 12,512 எதிர்தரப்புப் படைவீரர்களும் காயமடைந்தனர். அதோடு, 8,638 ஆஸ்ட்ரியப் படைவீரர்களும், 2,922 எதிர்தரப்புப் படைவீரர்களும் காணாமற்போயினர் அல்லது கைது செய்யப்பட்டனர். இந்தக் கொடுமையைப் பார்க்க நேர்ந்த சுவிட்சர்லாந்து வணிகர் Henry Dunant, போரில் காயமடைந்தவர்களுக்கு மனிதாபிமானச் சேவை செய்வதற்கென ஒரு சங்கத்தைத் தொடங்கினார். இதுவே ICRC எனப்படும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமாகும். 1863ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதியன்று சுவிட்சர்லாந்து நாட்டு ஜெனீவாவில் இது நிறுவப்பட்டது. Henry Dunant, நொபெல் அமைதி விருதை முதன் முதலில் பெற்றவராவார். இந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், பன்னாட்டு மற்றும் உள்நாட்டு அளவில் இடம்பெறும் ஆயுதம் ஏந்திய சண்டைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதுடன், போர் இடம்பெறும் இடங்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய பன்னாட்டு விதிகளை வலியுறுத்தும் மற்றும் போர்க்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பாகவும் செயல்பட்டு வருகின்றது. 1917, 1944, 1963 ஆகிய ஆண்டுகளில் நொபெல் அமைதி விருதையும் இச்சங்கம் பெற்றுள்ளது. இந்தச் சங்கம் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏறக்குறைய 13 ஆயிரம் தன்னார்வப் பணியாளர்களைக் கொண்டிருக்கிறது. இஞ்ஞாயிறன்று தனது 150வது ஆண்டைச் சிறப்பித்த இச்சங்கத்தின் தலைவர் Peter Maurer பேசியபோது, இக்காலத்திய புதிய ஆயுதங்களும், போர்க்களக்களில் தோன்றுகின்ற புதிய புதிய நபர்களும் தங்கள் சங்கத்தின் செயல்களை சிக்கலாக்குவதாகக் கூறியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.