2013-02-18 15:40:58

கர்தினால்கள் அவைக்கூட்டம் முன்னதாகவே இடம்பெறும் வாய்ப்புள்ளது


பிப்.18,2013. அடுத்தத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்கள் அவை, முன்னர் எண்ணியிருந்ததைவிட இன்னும் விரைவாகக்கூடும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் அருட்திரு ஃபெதரிக்கோ லொம்பார்தி எடுத்துரைத்தார்.
ஒரு திருத்தந்தையின் மறைவுக்குப்பின் அனைத்து கர்தினால்களும் உலகின் பலபாகங்களிலிருந்தும் வந்து கூடுவதற்கு குறைந்தபட்சம் 15 நாட்களும் அதிகபட்சம் 20 நாட்களும் கொடுக்கப்படவேண்டும் என்ற திருச்சபை விதி பற்றி குறிப்பிட்ட இயேசுசபை குரு லொம்பார்தி, திருத்தந்தை பதவி விலகும் இம்மாதம் 28ம் தேதிக்கு மறுநாளே அடுத்த தேர்தல் குறித்து கர்தினால்கள் திட்டங்கள் தீட்டுவதைத் துவக்கமுடியும் என்றார்.
ஒரு திருத்தந்தையின் திடீர் மறைவுக்குப்பின் கர்தினாலகள் தங்கள் நாடுகளிலிருந்து புறப்பட்டு வருவது என்பது வேறு என்று கூறிய அருட்தந்தை லொம்பார்தி, திருத்தந்தை பதவிவிலகுவது ஏற்கனவே தெரிந்துள்ளநிலையில் 15 நாட்கள் பொறுத்திருக்கவேண்டிய தேவையில்லை என்ற வகையில் இந்த விதி, விளக்கம் கொடுக்கப்படலாம் எனவும் தெரிவித்தார்.
கர்தினால் ஆஞ்சலோ சொதானோவை தலைவராகக்கொண்டுள்ள கர்தினாலகள் அவை கூடி, இது குறித்து விவாதிக்கும் எனவும் தெரிவித்தார் திருப்பீடப்பேச்சாளர் இயேசுசபை குரு லொம்பார்தி.








All the contents on this site are copyrighted ©.