2013-02-15 09:24:27

பிப்.16, 2013. கற்றனைத்தூறும்......தஞ்சை பெரிய (பிரகதீஸ்வரர்) கோவில்


தமிழ்நாட்டிலுள்ள தஞ்சை பெரிய (பெருவுடையார்) கோவில் உலகப் புகழ் பெற்ற வியப்பான கட்டிட வேலைப்பாடு கொண்ட இந்து ஆலயம். இது சோழ பேரரசன் இராஜராஜ சோழன் தஞ்சாவூரை ஆட்சிசெய்த கி.பி. 10ம்-11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கல்வெட்டுக்கள் மூலமாக அறியப்படுகின்றது. இந்த ஆலயக் கட்டிட வேலைகள் 1003 ம் ஆண்டு தொடங்கி 7 ஆண்டுகளில் முடிவுற்றதாக குறிப்பிடப்படுகின்றது. இந்தக் கோவிலின் வெளிச்சுவருக்கு வெளியே கோட்டை போன்ற அமைப்பும், அகழி போன்ற வாய்க்காலும் உள்ளன.
முதன்மையான கோபுரத்தின் உயரம் 215 அடி என கணக்கிடப்பட்டுள்ளது. இது கருவறையின் மேலே 96 அடி சதுரமான அடித்தளத்தின் மேல் ஒரே கல்லால் உருவாக்கப்பட்டது. கோபுரத்தின் நிழல் எக்காலத்திலும் நிலத்தில் விழாதபடி கோபுரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் கர்ப்பகிரகத்தில் மட்டும் சூரிய வெளிச்சம் படும்வண்ணம் அற்புதமான கட்டிட கலையால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தின் கருவறையில் அமைந்துள்ள ஆவுடையார் எனும் மூல லிங்கம் விசேட இரகத்தில் அமைந்த தனியான கல்லில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 23 அடி , சுற்றளவு 54 அடி உடையதாகவும் உள்ளது.
கோவிலின் முன் அமர்ந்த கோலத்தில் உள்ள தனிக் கல்லில் செதுக்கிய நந்தி 25 டன் எடை, 12 அடி உயரம், 8 அடி அகலம், 20 அடி நீளமும் உடையது.
கோபுரத்தின் உச்சியில் (விமானத்தில்) உள்ள எண்கோண் கலசம் 3.8 மீட்டர் உயரமும் 81 டன் எடையும் உடைய தனியான 25 அடி சதுரக் கல்லில் செதுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. ஒவ்வொரு மூலைக்கு இரண்டு நந்திகளாக எட்டு நந்திகள் இந்த விமானத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இக்கலசத்தினை செய்வதற்கு வேண்டிய அந்த கல்லை அக்காலத்தில் 6 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து எப்படிக் கொண்டுவந்தார்கள் என்பது, இன்றும் புரியாத புதிராக உள்ளது.
தமிழர்களின் கலை, கலாச்சாரம், கற்பனைத்திறன், சிற்பத்திறன் ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள தஞ்சை பெரிய கோவிலானது தமிழர்களின் ஆட்சி, அறம் இவற்றுடன் ஆன்மீகப் பணிக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து வருகிறது.
இந்தக் கோவில் தற்போது மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் இருந்துவருகின்றது. இந்த ஆலயம் (பிரகதீஸ்வரர்) UNESCO வினால் உலக கலாச்சாரச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(ஆதாரம் – அருவம் இணையதளம்)








All the contents on this site are copyrighted ©.