2013-02-14 16:37:37

வத்திக்கானுக்கும் இத்தாலிக்கும் இடையே ஒப்பந்தம்


பிப்.14,2013. வத்திக்கான் நாட்டிற்கு அருகேயிருக்கும் காஸ்தல் ஆஞ்சலோ என்ற தொன்மை கலைச்சின்னத்திற்கும் வத்திக்கான் நாட்டிற்கும் இடையேயுள்ள இரகசியப் பாதையைச் சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கென விடுவது குறித்த ஒப்பந்தம் இத்தாலிக்கும் வத்திக்கானுக்கும் இடையே இவ்வியாழனன்று கையெழுத்தாகியது.
வத்திக்கான் நகர் தாக்கப்பட்டால், திருத்தந்தையர்கள் தப்பி காஸ்தல் ஆஞ்சலோ மாளிகையில் தஞ்சம் புகுவதற்கென 1277ம் ஆண்டு திருத்தந்தை 3ம் நிக்கொலஸ் அவர்களால் கட்டப்பட்ட 800 மீட்டர் நீளமுடைய இந்த இரகசியப் பாதையைச் சீரமைப்பதற்கென ஏற்கனவே 1991ம் ஆண்டு இத்தாலிக்கும் வத்திக்கானுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் வத்திக்கான் சார்பில் வத்திக்கான் நாட்டு நிர்வாக அவை தலைவர் கர்தினால் Giuseppe Bertello மற்றும் இத்தாலிய அரசு சார்பில் அமைச்சர் Lorenzo Ornaghi ஆகியோர் கையெழுத்திட்டனர். இவர்களுடன் வத்திக்கான் நாட்டு நிர்வாக அவை பொதுச்செயலர் ஆயர் Giuseppe Sciacca தலைமையினாலான குழுவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டது.
வத்திக்கான் நகர் நிர்வாக அவையின் பொதுச்செயலராக இருக்கும் ஆயர் சியாக்கா, திருத்தந்தை இல்லாத காலங்களில், அடுத்த திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படும்வரை திருப்பீட நிர்வாக பொறுப்பைக் கவனிப்பவருக்கு முதன்மை ஆலோசகராக இருக்குமாறு இப்புதனன்று திருத்தந்தை 16ம் பெனடிக்டால் நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.