2013-02-14 16:24:09

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் விசுவாசிகளுடன் நிறைவேற்றிய இறுதித் திருப்பலி


பிப்.14,2013. இறைவனிடம் திரும்புதல் நமது முயற்சியால் மட்டும் நடப்பதில்லை, இறைவன் நம் இதயத்தை ஆழமாய் ஊடுருவி அசைக்கும்போது உருவாகும் அருளே நமது இதயத்தைக் கிழிக்கும் ஆற்றலைத் தரும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
தவக்காலத்தின் முதல் நாளன்று இடம்பெறும் திருநீற்றுப் புதன் திருப்பலியை இப்புதன் மாலை புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் நிறைவேற்றியத் திருத்தந்தை, "இதயத்தைக் கிழித்துக் கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்" என்று இறைவாக்கினர் யோவேல் விடுக்கும் அழைப்பு தவக்காலத்தைத் துவக்கி வைக்கிறது என்று தன் மறையுரையின் துவக்கத்தில் கூறினார்.
திருஅவையின் தலைமைப் பொறுப்பிலிருந்து தான் விலகுவதாக, கடந்த திங்களன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அறிவித்ததையடுத்து, அவர் விசுவாசிகளுடன் நிறைவேற்றும் இறுதித் திருப்பலி திருநீற்றுப் புதன் திருப்பலியாக இருக்கும் என்ற காரணத்தால், மக்கள் பெருமளவில் பங்கேற்பர் என்ற அடிப்படையில், வழக்கமாக புனித சபினா பேராலயத்தில் திருத்தந்தை நிறைவேற்றும் திருநீற்றுப் புதன் திருப்பலி, இவ்வாண்டு புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.
இந்த மாற்றத்தைப்பற்றி தன் மறையுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டத் திருத்தந்தை, திருத்தூதர் பேதுருவின் கல்லறையைச் சுற்றிக் கூடியிருக்கும் அனைவரும் இணைந்து திருஅவைக்காகச் செபிக்கும்படி அழைப்பு விடுத்தார்.
தவக்காலம், மனிதர்களின் தனிப்பட்ட மனமாற்றத்தை மட்டும் வலியுறுத்தும் காலம் அல்ல, மாறாக, திருஅவை என்ற குடும்பம் முழுவதும் இறைவனிடம் திரும்பி வருவதற்கு வழங்கப்பட்டுள்ள ஒரு காலம் என்பதைத் திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்தினார்.
தன்னலம், போட்டி மனப்பான்மை என்ற எதிர்மறை நாட்டங்களால் உலகிற்கு நாம் வழங்கக்கூடிய சாட்சிய வாழ்வு கேள்விக்குறியாகிறது என்பதை அனைவருமே உணர்ந்து, ஒன்றுபடவேண்டும் என்று திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் காணப்படும் 'இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!' என்ற வார்த்தைகளை வலியுறுத்தியத் திருத்தந்தை, நமக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த அருள்மிகுந்த வாய்ப்பை, இன்றே பயன்படுத்த வேண்டும் என்ற சவாலையும் விடுத்தார்.
மத்தேயு நற்செய்தியில் வழங்கப்பட்டுள்ள தர்மம் செய்தல், இறைவனிடம் வேண்டுதல், நோன்பு கடைபிடித்தல் ஆகிய முயற்சிகளைக் குறித்துப் பேசியத் திருத்தந்தை, தவக்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய இந்த முயற்சிகளை மனிதரிடையே புகழைப் பெறுவதற்கு மேற்கொள்வதில் பயனில்லை என்பதையும் விளக்கிக் கூறினார்.
திருப்பலியின் இறுதியில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சீசியோ பெர்தோனே திருத்தந்தைக்குச் சிறப்பான முறையில் நன்றி பகர்ந்தார். இன்று மாலை எங்கள் உள்ளங்கள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளன; தாங்கள் காட்டிய ஒளிமிக்க எடுத்துக்காட்டான வாழ்வுக்கு என்றும் நன்றி என்ற வார்த்தைகளுடன், அவர் நன்றியுரை அமைந்திருந்தது.
திருப்பலியின் இறுதியில் திருத்தந்தை பசிலிக்காவை விட்டு வெளியேறும்வரை மக்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பியதுடன், “Viva il papa!” 'திருத்தந்தை வாழ்க' என்ற பாரம்பரிய வாழ்த்தொலியையும் தொடர்ந்து எழுப்பி வந்தனர்.








All the contents on this site are copyrighted ©.