2013-02-13 16:03:13

நெற்றியில் பூசப்படும் சாம்பல், தாழ்ச்சியில் வளர நமக்கு அழைப்பு விடுக்கிறது - கர்தினால் Filoni


பிப்.13,2013. திருநீற்றுப் புதனன்று நமது நெற்றியில் பூசப்படும் சாம்பல் நாம் பாவிகள் என்பதை நினைவுறுத்தி, தாழ்ச்சியில் வளர நமக்கு அழைப்பு விடுக்கிறது என்று வத்திகான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இம்மாதம் 9ம் தேதி முதல் 16ம் தேதி முடிய இந்தியாவில் தன் மேய்ப்புப் பணி பயணத்தை மேற்கொண்டுள்ள நற்செய்தி அறிவிப்புப் பணி பேராயத்தின் தலைவர் கர்தினால் Fernando Filoni, இப்புதன் மாலை ராஞ்சி பேராலயத்தில் நிகழ்த்திய மறையுரையில் இவ்வாறு கூறினார்.
பாவத்தை விட்டு விலகவேண்டும் என்பது தவக்காலம் நம் ஒவ்வொருவருக்கும் தரும் சிறப்பு அழைப்பு என்று கூறிய கர்தினால் Filoni, ஆன்மீக வாழ்வில் புத்துணர்வு பெறுவதும் நமக்கு விடுக்கப்பட்டிருக்கும் அழைப்பு என்று கூறினார்.
ஒப்புரவு அருட்சாதனத்தின் வழியாக இத்தவக்காலத்தில் அடிக்கடி கிறிஸ்துவைச் சந்திக்கவேண்டும் என்பதை நினைவுறுத்திய கர்தினால் Filoni, நமது அயலவருடன் ஒப்புரவு பெறுவதும் தவக்காலம் நம்மீது சுமத்தும் கடமை என்று கூறினார்.
நம்பிக்கை ஆண்டில் அருள் பணியாளர்கள் தங்கள் செப வாழ்வை இன்னும் ஆழப்படுத்தவும், மக்களின் ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றவும் வேண்டும் என்று கூடியிருந்த குருக்களுக்குச் சிறப்பாக எடுத்துரைத்தார் கர்தினால் Filoni.








All the contents on this site are copyrighted ©.