2013-02-13 16:02:41

நிலத்தில் உழைக்கும் மனிதரை மையமாக்கியே தன் கருத்துக்களை வழங்கியுள்ளது திருஅவை - திருத்தந்தை


பிப்.13,2013. வேளாண்மையைப்பற்றி திருஅவை பேசியபோதெல்லாம், நிலத்தில் உழைக்கும் மனிதரை மையமாக்கியே தன் கருத்துக்களை வழங்கியுள்ளது என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வேளாண்மை வளர்ச்சியின் அகில உலக நிதி அமைப்பான IFAD, பிப்ரவரி 13 மற்றும் 14 ஆகிய இருநாட்கள் உரோம் நகரில் நடத்தும் கூட்டத்திற்குத் தன் செய்தியை அனுப்பியுள்ளத் திருத்தந்தை, வளர்ச்சி, முன்னேற்றம் என்ற கருத்துக்கள் மனிதரை மையப்படுத்தியதாக அமைவதே உண்மையான வளர்ச்சியைத் தரும் என்று கூறினார்.
“மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்” (மத்.25: 40) என்ற இயேசுவின் சொற்களை ஆழமாக நினைவுறுத்தும் தவக்காலத்தின் துவக்கத்தில் இக்கூட்டம் ஆரம்பமாவது பொருத்தமாக உள்ளது என்று திருத்தந்தை தன் செய்தியின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.
IFAD அமைப்பு ஆப்ரிக்காவின் கிராமப்புற விவசாயிகளின் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருவதைப் பாராட்டுவதாகக் கூறியத் திருத்தந்தை, biodiversity எனப்படும் பன்முக உயிர்களின் பாதுகாப்பிலும் நமது கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
உலகின் வறுமை, பசி ஆகியவற்றைப் போக்குவதில் IFAD அமைப்பு காட்டி வரும் அக்கறையைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, மிகவும் வறுமைப்பட்டவர்களுக்கு நிதி உதவிகள் செய்வது அவர்களது பசியைப் போக்குவதோடு, உழைக்கும் வசதிகளையும் செய்து கொடுத்து, அவர்கள் மதிப்புடன் வாழ உதவுகிறது என்பதையும் எடுத்துரைத்தார்.
பன்னாட்டு அரசுகளின் ஒத்துழைப்புடன் செயல்படும் IFAD அமைப்பைக் குறித்து திருப்பீடம் எப்போதும் மதிப்பு கொண்டுள்ளது என்பதையும் எடுத்துரைத்தத் திருத்தந்தை, பசியையும் வறுமையும் பின்னே தள்ளி, நீதியையும் அமைதியையும் நிலைநாட்டும் சமுதாயத்தை உருவாக்க IFAD அமைப்பு தொடர்ந்து செயல்பட தன் சிறப்பு வாழ்த்துக்களையும் இச்செய்தியின் இறுதியில் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.