2013-02-13 16:03:35

திருஅவையின் தலைவர் என்பது பணிக்கென கொடுக்கப்பட்ட ஒரு பொறுப்பே என்பதைப் புரிந்துகொள்ள திருத்தந்தையின் முடிவு உதவுகிறது - பேராயர் Williams


பிப்.13,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பதன் மூலம், கத்தோலிக்கத் திருஅவையின் தலைவர் என்ற பொறுப்பைக் குறித்த இன்னும் தெளிவான கண்ணோட்டத்தைத் வழங்கியுள்ளார் என்று ஆங்கலிக்கன் சபையின் தலைவராக இருந்து ஒய்வு பெற்றுள்ள பேராயர் Rowan Williams கூறினார்.
முன்னாள் Canterbury பேராயராகப் பணியாற்றிய Williams, திருத்தந்தையின் பதவி விலகல் அறிவிப்பைத் தொடர்ந்து, வத்திக்கான் வானொலிக்கு இச்செவ்வாயன்று அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
தங்களையே கடவுள்கள் என்று எண்ணி அரியணையில் அமர்ந்த மன்னர்களைப் போல இல்லாமல், திருஅவையின் தலைவர் என்பது பணிக்கென கொடுக்கப்பட்ட ஒரு பொறுப்பே என்பதைப் புரிந்துகொள்ள திருத்தந்தையின் இந்த முடிவு உதவுகிறது என்று பேராயர் Williams கூறினார்.
2012ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி ஆங்கிலிக்கன் சபையின் தலைமைப் பதவியிலிருந்து விலகிய பேராயர் Williams, தான் பதவி விலகும் முடிவைக் குறித்து திருத்தந்தையுடன் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும், அப்போது திருத்தந்தையும் தன் தனிப்பட்ட எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதாகவும் கூறினார்.
பிரித்தானியாவில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மேற்கொண்ட திருப்பயணத்தை இப்பேட்டியில் நினைவுகூர்ந்த பேராயர் Williams, பதவி விலகலுக்குப் பின் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் இறையியல் சிந்தனைகளைத் தொடர்ந்து பகிர்ந்து கொள்வார் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.