2013-02-12 16:05:19

திருத்தந்தையின் பதவி விலகல் அறிக்கை


பிப்.11, 2013.
அன்புச் சகோதரர்களே,
மூன்று புனிதர்பட்ட நிலைகளைக் குறித்து விவாதிப்பதற்காக மட்டும் நான் இந்த கர்தினால்கள் கூட்டத்திற்கு உங்களை அழைக்கவில்லை, திருஅவையின் வாழ்விற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முடிவை அறிவிக்கவுமே உங்களை அழைத்தேன். இறைவனின் முன் என் மனச்சான்றை மீண்டும் மீண்டும் ஆய்வுச்செய்து, நான் ஓர் உறுதியான முடிவுக்கு வந்துள்ளேன். அதாவது, என் முதுமையின் காரணமான என் உடல் வலுவின்மை, ஒரு திருத்தந்தைக்குரிய பணிகளை ஏற்று நடத்துவதற்கு இயைந்ததாக இல்லை என்பதே அது. ஆன்மீகத்தன்மையின் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ள இப்பணி, வார்த்தைகளாலும் செயல்பாடுகளாலும் மட்டுமல்ல, செபத்தாலும் துன்பங்களைத் தாங்குவதாலும் எடுத்து நடத்தக்கூடியது. பலவித துரித மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டும், விசுவாச வாழ்வுக்கான ஆழமான தொடர்புடைய கேள்விகளால் அதிர்வுற்றும் இருக்கும் இன்றைய உலகில், தூய பேதுருவின் படகை நடத்திச் செல்லவும், நற்செய்தியை பறைசாற்றவும் உடல், உள்ள பலம் தேவை. கடந்த சில மாதங்களில் இந்த பலம் குன்றிப்போனதை நான் உணர்ந்து, என்னிடம் ஒப்படைக்கப்பட்டப் பணிகளை சரியான முறையில் நிறைவேற்ற இயலாமையை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு வந்துள்ளேன். இக்காரணத்திற்காக, அதேவேளை இச்செயல்பாட்டின் தீவிரத்தை உணர்ந்துள்ள நிலையில், தூய பேதுருவின் வழிவந்தவரான உரோமை ஆயர் பணியிலிருந்து விலகுவதாக முழு சுதந்திரத்துடன் அறிவிக்கிறேன். கர்தினால்களால் 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் நாள் என்வசம் ஒப்படைக்கப்பட்ட இப்பொறுப்பிலிருந்து 2013ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி இரவு எட்டு மணிக்கு நான் விலகுவதால், தூய பேதுருவின் திருப்பீடமாகிய உரோமை திருப்பீடம் காலியாக இருக்கும். அடுத்தத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பிலுள்ளோர் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்கள் அவையைக் கூட்டுவர்.
அன்புச் சகோதரர்களே, என்னுடைய மேய்ப்புப்பணியில் அன்பு மற்றும் பணிகள் மூலம் எனக்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றி கூறுவதோடு, என்னுடைய குறைபாடுகளுக்காக மன்னிப்பையும் வேண்டுகிறேன். நாம் இப்போது நம் புனித திருஅவையை உன்னத மேய்ப்பராம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வசம் ஒப்படைத்து, அதேவேளை, புதியத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதில் திருஅவைத் தந்தையர்களாம் கர்தினால்களுக்கு ஒரு தாய்க்குரிய ஆலோசனைகளை வழங்கி உதவுமாறு ஆண்டவரின் தாயாம் அன்னைமரி நோக்கி இறைஞ்சுவோம். என்னைப் பொறுத்த வரையில், செபத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்வு மூலம் வருங்காலத்தில் திருஅவைக்குச் சேவையாற்ற ஆவல் கொள்கின்றேன்.

வத்திக்கானிலிருந்து, 10 பிப்ரவரி 2013.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.