2013-02-12 15:28:45

கற்றனைத் தூறும் - புதிய கப்பலின் முதல் பயணம்


புதிதாகக் கட்டிமுடிக்கப்பட்ட கப்பலொன்று கடலில் முதல் பயணம் செல்லும்போது, அதன் மீது ஒரு ‘ஷாம்பெய்ன்’ புட்டி உடைக்கப்படுவதைப் பார்த்திருக்கிறோம். இந்தப் பழக்கத்திற்கு ஒரு பின்னணி உண்டு.
கி.பி. பத்தாம் நூற்றாண்டில், புதிதாகக் கட்டப்பட்ட கப்பலொன்று கடலில் பயணம் மேற்கொண்டபோது, அப்பயணத்தை வழிநடத்த, இறந்த முன்னோரின் ஆவிகளை வேண்டினர். இந்த வேண்டுதலின் ஒரு பகுதியாக, மிருகங்கள் பலியாக்கப்பட்டு, அவற்றின் இரத்தம் கப்பலைச் சுற்றி தெளிக்கப்பட்டது. நாளடைவில், மிருக இரத்தம் தெளிப்பது கலாச்சாரக்குறைவு என்று கருதப்பட்டதால், அதற்குப் பதிலாக, சிவப்பு திராட்சைப்பழ இரசம் (ஒயின்) தெளிக்கப்பட்டது.
இந்தப் பழக்கத்திற்குக் கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சிவப்புப் பழரசத்திற்குப் பதிலாக, வெள்ளைப் பழரசம் தெளிக்கப்பட்டது. வெள்ளைப் பழரசத்திலேயே விலையுயர்ந்த ‘ஷாம்பெய்ன்’ தற்போது கப்பல்கள் மீது தெளிக்கப்படுகிறது. இச்சடங்கின்போது கப்பல்களுக்கு பெயர் வழங்குவதும் பழக்கம்.
ஜப்பானில் இச்சடங்கு நடைபெறும்போது, கப்பல் உரிமையாளரிடம் ஒரு வெள்ளிக் கோடாலி பரிசாகத் தரப்படும். வெள்ளிக் கோடாலி, தீய ஆவிகளை விரட்டியடிக்கும் என்ற நம்பிக்கை ஜப்பானியர்கள் மத்தியில் உண்டு. கப்பலின் உரிமையாளர் அக்கோடாலியைக் கொண்டு கப்பலைக் கட்டியிருக்கும் கயிற்றை வெட்டுவார். இந்தியாவில், கப்பல் புறப்படுவதற்கு முன் பூஜைகள் நடைபெறும். அதன் முடிவில் கப்பலின் வெளிப்புறத்தில் ஒரு தேங்காய் உடைக்கப்படும். இவ்விதம் ஒவ்வொரு நாட்டிலும் வேறுபட்ட பழக்கங்கள் உள்ளன.








All the contents on this site are copyrighted ©.