2013-02-11 17:10:38

வாரம் ஓர் அலசல் – என்னில் இருப்பதைக் கண்டு கொண்டால்....


பிப்.11,2013 RealAudioMP3 . அன்பு நேயர்களே, சீனப் புத்தாண்டு, பாம்பு ஆண்டு என்ற பெயரில் இச்சனிக்கிழமை நள்ளிரவில் வெகு ஆடரம்பத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பூமியில் மனிதர்கள் பெருமளவில் இடம்பெயரும் விழா இந்தச் சீனப் புத்தாண்டு விழா என்று சொல்லப்படுகிறது. இப்புத்தாண்டைத் தங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து கொண்டாடுவதற்காக, ஏறக்குறைய 20 கோடிப்பேர் சீனாவில் பயணம் செய்துள்ளனர். சீனாவைப் பூர்வீகமாகக் கொண்ட அனைவரும் கொண்டாடும் இப்புத்தாண்டுக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்டும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் வாழ்த்துக் கூறினார். அமைதி, நல்லிணக்கம், இறைவனுக்கு நன்றி ஆகிய உலகளாவிய விழுமியங்களைக் கொண்டாடும் இம்மக்களின் மகிழ்ச்சி மற்றும் வளமான வாழ்வுக்கான ஏக்கம் நிறைவேறட்டும் என வாழ்த்தினார்.
RealAudioMP3 சீனர்களின் சோதிட நாள்காட்டியிலுள்ள 12 விலங்குகளில் பாம்பும் ஒன்று. இந்தப் பாம்பு ஆண்டில் பிறப்பவர்கள் அமைதியும், சிக்கனமும், சாகச குணமும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது சீனச் சோதிடத்தின் கணிப்பு. சீனாவில், பாம்பு, ஞானம், அழகு, அறிவு ஆகியவற்றோடு தொடர்புபடுத்தப்பட்டாலும், தற்பெருமை, கோபம் ஆகியவற்றோடும் அது தொடர்புபடுத்தப்படுகிறது. மனித வாழ்க்கையில் ஞானமும், அழகும், அறிவும், அன்பும் நிறைந்தவர்களாக வாழவேண்டுமென்பதே நம் ஒவ்வொருவரின் ஆவல். கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்துள்ள அறிவையும் ஆற்றலையும் ஞானத்தையும் நல்வழிக்குப் பயன்படுத்தும் மனிதர்கள் பற்றி அறியவரும்போது, ஏன் நானும் இந்த மாதிரியான மனிதர்களில் ஒருவராக இருக்கக் கூடாது என்ற சிந்தனைகள் உதிப்பது ஆக்கத்திற்கு வழிவகுக்கும். இப்படிச் சிந்திக்கும்போது ஒருவர் தன்னிடம் இல்லாத ஆற்றலுக்காக ஏங்குவதைவிட தன்னிடம் இருக்கும் திறமையைக் கண்டறிந்து அதனை வளர்த்துக்கொள்ளும் வழிகளில் இறங்கினால், அது தனக்கு மட்டுமல்ல, தன்னைச் சுற்றி இருப்போருக்கும் பேருதவியாக இருக்கும்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் Itzhak Perlman என்ற புகழ்பெற்ற வயலின் மேதை வாழ்ந்து வருகிறார். இவரைப் பார்த்தவுடன், ஐயோ பாவம்.. என்ற இரக்க உணர்வுதான் முதலில் தோன்றும். ஏனெனில் இவர் 4 வயதில் இளம்பிள்ளைவாத நோயால் தாக்கப்பட்டவர். இரண்டு கவட்டுக்கட்டைகளின் உதவியுடன் நடக்கும் இவர், சிறிய மின்சார வண்டியையும் பயன்படுத்துகிறார். இரண்டு கவட்டுக்கட்டைகளுடன் அவர் கச்சேரி மேடைக்கு நடந்துவருவதைக் காணும் பார்வையாளர்களின் கண்கள் நீரால் நிறைந்து விடுகின்றன. ஆனால் அவர் நாற்காலியில் அமர்ந்து வயலினை வாசிக்கத் தொடங்கியதும் அந்த அரங்கத்தின் சூழலே மாறி விடுகின்றது. அது 1995ம் ஆண்டு நவம்பர் 18. அன்று நியுயார்க் நகரிலுள்ள லிங்கன் மையத்தில், Avery Fisher அரங்கத்தில் Itzhak Perlmanனின் இசைக்கச்சேரி நடந்தது. அன்று அவரது வயலினின் நான்காவது நரம்பு அறுந்துபோகும்வரையில் அனைவரும் அவரது இசைமழையில் நனைந்து கொண்டுதான் இருந்தனர். ஆனால், அந்த நரம்பு அறுந்துபோனதும், அரங்கத்தில் துப்பாக்கி வெடித்தது போன்ற அதிர்ச்சியில் அனைவரும் உறைந்திருந்தனர். அப்படியோர் அமைதி அங்கு நிலவியது. நடந்ததற்கு வருத்தம் தெரிவித்து அந்த மேடையைவிட்டு அவர் போய்விடுவார் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் Itzhak அப்படிச் செய்யவில்லை. சிறிதுநேரம் கண்களை மூடி, அமைதியாக தலைகுனிந்து அமர்ந்திருந்தார். பின்னர் தலையை நிமிர்த்தி, அந்தக் கச்சேரியை வழிநடத்தியவரை மீண்டும் ஆரம்பிக்கச் சொன்னார். அவர் எங்கே நிறுத்தினாரோ அங்கிருந்து மீண்டும் தொடங்கினார். கச்சேரி களைகட்டியது. வயலினின் மூன்று நரம்புகளை மட்டும் வைத்துக்கொண்டு அவர் வாசித்தவிதம் அதிஅற்புதம் என்று, அன்று அந்த அரங்கத்தில் இருந்தவர்கள் சொன்னார்கள். அப்படியொரு சக்தியுடனும், திறமையுடனும், ஆர்வத்துடனும் அவர் வாசித்தார். அன்று அவர்கள் கேட்ட அந்த இசை, அதுவரை கேட்டிராத இசையாக இருந்தது என்றும் அனைவரும் வியந்து சொன்னார்கள். Itzhak அன்று அக்கச்சேரியை நிறைவு செய்தபோது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். அன்று அம்மேடையைவிட்டுச் செல்வதற்கு முன்னர் அவர் சொன்ன வார்த்தைகள்தான் இன்று நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.
“ஒரு கலைஞர், தன்னிடம் இருக்கும் கருவியில் மீதமுள்ள பகுதியிலிருந்து எவ்வளவு இசையை வெளிக்கொணர முடியும் என்பதைக் கண்டுபிடிப்பது சிலநேரங்களில் அவரின் கடமையாகவும், பணியாகவும் இருக்கின்றது”.
தனது முகத்தில் வடிந்து கொண்டிருந்த வேர்வையைத் துடைத்துக்கொண்டு புன்முறுவலுடன் இப்படிச் சொன்னார் Itzhak.
வயலினின் நான்கு நரம்புகளால் இசையை எழுப்புவதற்குப் பழக்கப்பட்டிருந்த Itzhak, திடீரென, இசைக்கச்சேரியின் இடையில் மூன்று நரம்புகளால்மட்டும் வாசிக்க வேண்டிய நிலைக்கு உள்ளானார். ஆயினும், அந்த இசையானது மேலும் அதிக இனிமையானதாக, புனிதமானதாக, என்றும் மறையாத, மங்காத, புகழ் சேர்க்கும் இசையாக மாறியது. நான்காவது நரம்பு இல்லையே என்று சோர்ந்துவிடாமல், மீதமிருந்த மூன்று நரம்புகளை வைத்து எப்படி இசையை வெளிக்கொணரலாம் என்று Itzhak சிந்தித்ததன் விளைவே அந்தப் புதிய இசை.
ஆம். அன்பர்களே! “தன்னிடம் இருக்கும் கருவியில் மீதமுள்ள பகுதியிலிருந்து எவ்வளவு இசையை வெளிப்படுத்த முடியும் என்பதைக் கண்டுபிடிப்பது சிலநேரங்களில் கலைஞனின் கடமையாக, பணியாக இருக்கின்றது” என்று Itzhak சொன்னதை இப்பொழுது கேட்கும்போது, உங்களிலும் புதிய சிந்தனைகள் எழுகின்றனவா?. மற்றவர்கள் திறம்படக் காரியங்களைச் செய்யும்போது, ஐயோ, என்னிடம் இந்தத் திறமைகள் இல்லையே என்று நீங்கள் எப்போதாவது எண்ணியதுண்டா?. அப்படி எண்ணியிருந்தால் இன்று, இந்த நொடிப்பொழுதில் அத்தகைய எண்ணத்தை மூட்டைக்கட்டி, கண்காணாத் தூரத்தில் தூக்கி எறிந்து விடுங்கள். உங்களிடம் இருக்கும் திறமைகளை உன்னிப்பாக நோக்குங்கள். அவற்றிலிருந்து முன்னேற முயற்சியுங்கள். நம்மைப் போன்ற பலர் தங்களிடம் இருப்பதை வைத்து முன்னேறி வருகின்றனர். இவர்கள் குறித்து தினமும் ஊடகங்கள் வழியாக அறிய வருகின்றோம். கடந்த வாரத்தில் வாசித்த சில தகவல்களில் ஓரிரண்டை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்.
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், நேரலகிரியைச் சேர்ந்த அஸ்வத் நாராயணன் என்பவருக்கு வயது 75. போக்குவரத்து கழகத்தில் வேலை செய்துவந்த இவர், பணி ஓய்வுக்குப்பின், ஒரு பசுமாடு மற்றும் ஒரு கன்றை வளர்த்துக் கொண்டு, அதில் கிடைக்கும் சாணம் மற்றும் கோமியத்தைக் கொண்டு, தனக்குச் சொந்தமான எட்டு ஏக்கர் நிலத்தில், கடந்த 11 ஆண்டுகளாக இயற்கை உரம் மற்றும் மருந்துகளை, தானே தயாரித்து, அதன் மூலம் தென்னை, மா, வாழை போன்ற பயிர்களைச் சாகுபடி செய்து சாதனை புரிந்து வருகிறார்.
சில வருடங்களுக்கு முன்புவரை சாதாரண கிராமத்துப் பெண்ணாக இருந்தவர் செல்வி. இப்போது புதுக்கோட்டை மாவட்டம், குருந்தடிமலை கிராமத்தின் 'சக்தி மகளிர் சுயஉதவிக்குழுவின்' தலைவி! வேளாண்மையில் அறிவியல் முறைகளைக் கையாண்டு வெற்றி பெற்றது, ஊரில் பல ஆக்கப்பணிகளையும் முன்நின்று நடத்தியது என்ற பாராட்டு மற்றும் விருதுகளைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். வேளாண்மையில் எதுவும் மீதப்படாததால் இரண்டு பிள்ளைகளை வளர்க்கவும், குடும்பம் நடத்தவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த செல்வி, வாழ்க்கையில் முயற்சியும் உழைப்பும், தன்னம்பிக்கையும் தேவை என்கிறார்.
ஆந்திராவில், 70 வயதான ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் ஒய்.நரசிம்மமூர்த்தி, தண்ணீரில் மிதந்தபடி, 30 நிமிடத்தில், 38 யோகாசனங்களை செய்து சாதனை படைத்துள்ளார்
அறிவியல் வல்லுனர் தாமஸ் ஆல்வா எடிசனின் பிறப்பை, பிப்ரவரி 11, இத்திங்களன்று உலகம் கொண்டாடியது. இதற்குக் காரணம் இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் அவரின் பல கண்டுபிடிப்புக்கள். 12வது வயதிலேயே படிப்புக்கு முடிவு கட்டிய எடிசன், மின்விளக்கு மட்டுமல்லாமல், போனோகிராப், டெலிபிரின்டர், பேட்டரி, சிமென்ட், நிலக்கரி, கேமரா, ஒலி நாடா உள்ளிட்ட ஏராளமான கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். இவர், அமெரிக்காவில் மட்டும் தன் பெயரில் 1093 கண்டுபிடிப்புகளுக்கான உரிமங்களைப் பதிவு செய்துள்ளார்.
அன்பு நெஞ்சங்களே, இப்படி, பலரின் சாதனைகளைத் தினமும் கேட்டு வருகிறோம். “நாம் எவ்வளவு வைத்திருக்கிறோம் என்பது பெரிதல்ல, ஆனால் அவற்றை எப்படி நன்றாகப் பயன்படுத்துகிறோம் என்பதுதான் பெரிது” என்ற கூற்றையும் நாம் அடிக்கடி கேட்டு வருகிறோம். எந்த ஒரு நல்ல கூற்றையும் கேட்டால் மட்டும் போதாது, அது குறித்து சிந்தித்து அதனைச் சொந்த வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும்.
ஒரு முனிவர் காட்டில் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒருவர் அந்த முனிவரின் சீடனாக மாறும் ஆசையில் அவரிடம் வந்தார். முனிவர் அவரிடம், நீ யார் என்று கேட்க, வந்தவர், சேஷாத்திரி என்றார். அது உன் பெற்றோரால் கொடுக்கப்பட்ட பெயர் என்றார் முனிவர். மறுபடியும் அவரிடம், நீ யார் என்று கேட்டார் முனிவர். ஒன்றும் புரியாமல் முழித்த சேஷாத்திரி, நான் மனிதன் என்றார். அது உனக்கு இந்தச் சமூகம் கொடுத்த பெயர் என்றார் முனிவர். பின்னர், நீண்ட நேர மௌனத்துக்குப் பிறகு சேஷாத்திரி முனிவரிடம், எனக்கு நான் யார் என்று தெரியவில்லை குருவே என்றார். அன்பர்களே, நான் யார் என்று அறிவது நம் ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் மிகவும் முக்கியம். கவியரசர் கண்ணதாசன் அவர்களின் அழகான, ஆழமான கவிதை வரிகள் நமக்குத் தெரியும்.
உன்னை அறிந்தால் - நீ
உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்.
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலைவணங்காமல் நீ வாழலாம்.
ஆம். என்னில் இருப்பதை நான் கண்டு கொண்டால், உலகத்தில் போராடலாம். உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல் வாழலாம்.







All the contents on this site are copyrighted ©.