2013-02-11 17:04:26

நம்பிக்கை ஆண்டில் அன்னைமரியின் எடுத்துக்காட்டுகளைப் பின்பற்றி வாழ்வோம்


பிப்.11,2013. வேளாங்கண்ணியில் தனக்கென வழங்கப்பட்டுள்ள வீட்டில் அன்னைமரி இந்நாட்டு மக்களுடன் நிரந்தரமாகத் தங்க ஆவல் கொண்டுள்ளார் எனத் தன் மறையுரையில் குறிப்பிட்டார் நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர் கர்தினால் ஃபெர்னாண்டோ ஃபிலோனி.
வேளாங்கண்ணி மரியன்னை திருத்தலம் மைனர் பசிலிக்காவாக உயர்த்தப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவு மற்றும் இந்திய இலத்தீன் ரீதி ஆயர் பேரவையின் 25ம் ஆண்டு ஆகிய கொண்டாட்டங்களில் திருத்தந்தையின் பிரதிநிதியாகக் கலந்துகொள்ளும் கர்தினால் ஃபிலோனி, இஞ்ஞாயிறன்று வேளாங்கண்ணியில் நிறைவேற்றிய திருப்பலியில், அன்னை மரி இங்கு நம் ஒவ்வொருவரின் குடும்ப அங்கமாக மாறியுள்ளார் என்றார்.
கானாவூர் திருமணத்தில் இரசம் தீர்ந்துவிடவே, தன் மகன் மூலம் அங்கு உதவிய அன்னை மரி, நம் ஒவ்வொருவருக்கும் தொடர்ந்து உதவிக்கொண்டேயிருக்கிறார் என்றகர்தினால், அன்னைமரியின் விசுவாசமும், இறையழைப்பிற்கான கீழ்ப்படிதலும் நமக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் என மேலும் உரைத்தார். அன்னைமரி எலிசபெத்தை சந்திக்கச் சென்றது, தன் கணவர் வளன் மீது நம்பிக்கை வைத்து அவருடன் எகிப்துக்குச் சென்றது, இயேசுவின்மீது முழு விசுவாசத்தில் சிலுவை மரணம் வரை அவரைப் பின்தொடர்ந்தது ஆகியவைகளையும் சுட்டிக்காட்டிய கர்தினால், விசுவாசத்தின் வழி அவர் உயிர்ப்பின் கனிகளைச் சுவைத்தார் என மேலும் கூறினார்.
இவ்வாறு அன்னைமரியின் எடுத்துக்காட்டுகளைத் தன் மறையுரையில் எடுத்தியம்பிய கர்தினால் ஃபிலோனி, இந்த நம்பிக்கை ஆண்டில் நம் நடவடிக்கைகள் மூலம் விசுவாசத்தின் சாட்சிகளாக விளங்குவோம் என மேலும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.