2013-02-11 17:00:02

திருத்தந்தை சீன மக்களின் மகிழ்ச்சி மற்றும் வளமான வாழ்வுக்கான ஏக்கம் நிறைவேறட்டும்


பிப்.11,2013. இஞ்ஞாயிறன்று தொடங்கியுள்ள சீனப் புத்தாண்டு, இத்திங்களன்று ஜெர்மனியின் பவேரியா மாநிலத்திலுள்ள Altötting அன்னைமரியா திருத்தலத்தில் சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக நோயாளர் தினம் ஆகிய இரு தினங்களை இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் நினைவுகூர்ந்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏறக்குறைய 20 ஆயிரம் மக்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை, தூர கிழக்கு நாடுகளில் புத்தாண்டைக் கொண்டாடும் மக்களின் மகிழ்ச்சி மற்றும் வளமான வாழ்வுக்கான ஏக்கம் நிறைவேறட்டும் என வாழ்த்தினார்.
அமைதி, நல்லிணக்கம், இறைவனுக்கு நன்றி ஆகிய உலகளாவிய விழுமியங்களை இப்புத்தாண்டில் இம்மக்கள் சிறப்பிக்கின்றனர் என்றும் கூறிய திருத்தந்தை, இப்புத்தாண்டைச் சிறப்பிக்கும் இந்நாடுகளின் கத்தோலிக்கர் இந்த நம்பிக்கை ஆண்டில் கிறிஸ்துவின் ஞானத்தால் வழிநடத்தப்படுவார்களாக என, இந்நாடுகளின் கத்தோலிக்கருக்குச் சிறப்பான வாழ்த்தையும் தெரிவித்தார்.
Altötting அன்னை மரியா திருத்தலத்தில் அனைத்துலக நோயாளர் தினத்தைச் சிறப்பிக்கக் கூடியிருக்கும் அனைவருடனும், குறிப்பாக, நோயாளிகளுடன் தான் ஆன்மீகமுறையில் ஒன்றித்திருப்பதாகத் தெரிவித்தார் திருத்தந்தை.
சீனப் புத்தாண்டு, பாம்பு ஆண்டு என்ற பெயரில் இச்சனிக்கிழமை நள்ளிரவில் வெகு ஆடரம்பத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.