2013-02-09 14:53:42

பிப்.10, பொதுக்காலம் - 5வது ஞாயிறு : ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 திருமுழுக்கு யோவானிடம் இயேசு திருமுழுக்கு பெற்ற நிகழ்வை நான்கு வாரங்களுக்கு முன் சிந்தித்தோம். இந்த நிகழ்வைக் குறித்து மக்களுக்கு மறையுரையாற்றிய ஒருவர், இறுதியில் ஒரு சிறு செபத்தைச் சொன்னார்: "இறைவா, இயேசுவைப்போல் பணிவில் நாங்கள் வளரச் செய்தருளும். எங்களுக்கு முன் நிற்பவர்கள் எங்களைவிட தாழ்ந்தவர்கள் என்பதை நாங்கள் அறிந்திருந்தாலும், அவர்களுக்கு முன் பணிவுடன் இருக்க வரம் தாரும்" என்று அவர் வேண்டினார்.
இது மிகவும் ஆபத்தான, அபத்தமான, தவறான செபம். போலித்தாழ்மைக்கு அழகானதோர் எடுத்துக்காட்டு. நமக்கு முன் நிற்பவர் நம்மைவிட தாழ்ந்தவர் என்ற எண்ணமே நம்மைத் தற்பெருமையில் சிக்கவைத்துவிடும். அந்தப் பெருமிதமான எண்ணங்களுடன் அவர்களுக்கு முன் பணிவது, நடிப்பே தவிர, உண்மையான பணிவு அல்ல. இயேசுவைப்போல் எம்மை மாற்றும் என்று சொன்ன அதே மூச்சில் போலியானத் தாழ்ச்சியையும் இணைப்பது மிகவும் ஆபத்தானது.
பணிவைப் பற்றிய தெளிவான எண்ணங்கள் இல்லாதபோது, இவ்விதம் அரைகுறை கருத்துக்கள் வெளிவர வாய்ப்புக்கள் உள்ளன. நமது சிறுவயது முதல் நமக்கு பணிவுப் பாடங்கள் பல சொல்லித் தரப்பட்டுள்ளன. கீழை நாடுகளில் குழந்தைகளுக்குச் சொல்லித் தரப்படும் பெருமை, பணிவு என்ற பாடங்களுக்கும் மேலை நாடுகளில் குழந்தைகளுக்குச் சொல்லித் தரப்படும் பாடங்களுக்கும் வேறுபாடுகள் அதிகம் உண்டு.

பெருமை, பணிவு என்ற இரு மனித உணர்வுகளை, மனநிலைகளை ஆய்வுசெய்ய இன்றைய ஞாயிறு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. மேலோட்டமாகச் சிந்திக்கும்போது, பெருமையும், பணிவும் எதிரும் புதிருமான முரண்பட்ட இரு மனநிலைகளாகத் தோன்றுகின்றன. ஒன்று இருக்கும் இடத்தில், மற்றொன்று இருக்கமுடியாது என்பதே நம்மிடையே உள்ள பரவலான கருத்து. ஆயினும், ஆழமாகச் சிந்தித்தால், உண்மையான பெருமையும், உண்மையான பணிவும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
உண்மையான பணிவு, உண்மையான பெருமை என்பவை யாவை என்று கருத்துக்களைத் திரட்ட நான் முற்பட்டபோது, போலியான பணிவு, போலியான பெருமை என்பவைகள் பற்றிய கருத்துக்களையே அதிகம் கண்டேன். ஒளி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள இருளைப்பற்றி நாம் சிந்திப்பதுபோல், உண்மையான பணிவு அல்லது பெருமை ஆகியவற்றைப் புரிந்துகொள்ள போலியானப் பணிவு, போலியான பெருமை ஆகியவற்றை உருவாக்கும் அகந்தையைப் புரிந்துகொள்வது நல்லது.

கதாசிரியராக, கவிஞராக, இறையியல் மேதையாக, பேராசிரியாகப் பணியாற்றியவர் C.S.Lewis. இவர் 1942ம் ஆண்டுமுதல், ஈராண்டுகள் BBC வானொலியில் வழங்கிய உரைகளைத் தொகுத்து, Mere Christianity - குறைந்தபட்ச கிறிஸ்தவம் - என்ற நூலை 1952ம் ஆண்டு வெளியிட்டார். இந்நூலில் 'The Great Sin' - பெரும் பாவம் - என்ற தலைப்பில் அகந்தையைப்பற்றி ஆழமான கருத்துக்களைக் கூறியுள்ளார். அக்கட்டுரையின் ஆரம்ப வரிகளே நம்மை ஈர்க்கின்றன:
"எவ்வித விதிவிலக்கும் இல்லாமல், இந்த உலகில் வாழும் அனைத்து மனிதரிடமும் ஒரு குறை உள்ளது. மற்றவர்களிடம் இக்குறையைக் கண்டு வெறுக்கும் நாம், அதே குறை நம்மிடம் உள்ளதென்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். இதுதான் அகந்தை" என்று அவர் தன் கட்டுரையை ஆரம்பித்துள்ளார். பின்னர், அகந்தையின் ஒரு முக்கியப் பண்பான ஒப்புமைப்படுத்துதல், போட்டிப் போடுதல் என்பவைக் குறித்து அழகாக விவரிக்கிறார்:

ஒப்புமையும், போட்டியும் இன்றி அகந்தையால் வாழமுடியாது. என்னிடம் ஒன்று உள்ளது என்று சொல்வதைவிட, ‘என்னிடம் உள்ளது, அடுத்தவரிடம் உள்ளதை விட அதிகம் என்ற கோணத்தில் நம்மைச் சிந்திக்கத் தூண்டுவதே அகந்தை. என் திறமை, அழகு, அறிவு இவற்றில் நான் பெருமை கொள்கிறேன் என்று ஒருவர் சொல்கிறார். உண்மையில் அவர் சொல்ல முனைவது வேறு... மற்றவர்களைக் காட்டிலும், அதிகத் திறமையுள்ளவராக, அழகானவராக, அறிவுள்ளவராக இருப்பதில்தான் பெருமை - அதாவது, அகந்தை - கொள்ளமுடியும். சமநிலையில் அழகு, அறிவு, திறமை உள்ளவர்கள் மத்தியில், ஒருவர் அகந்தை கொள்ளமுடியாது. ஒப்புமையோ, போட்டியோ இல்லாதச் சூழலில் அகந்தைக்கு இடமில்லை" என்று கூறும் Lewis, தொடர்ந்து அகந்தையின் மற்றொரு தவறான அம்சத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேறுபல குறையுள்ள மனிதர்கள் இணைந்து மகிழ வாய்ப்புண்டு. எடுத்துக்காட்டாக, குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் இணைந்துவந்து மகிழும் வாய்ப்புண்டு. ஆனால், அகந்தையில் ஊறிப் போனவர்கள் சேர்ந்துவருவது இயலாதச் செயல். அப்படியே சேர்ந்துவந்தாலும், அவர்களில் யார் மிக அதிக அகந்தை உள்ளவர் என்பதை நிரூபிக்கும் போட்டி உருவாகும்.இந்தப் போட்டியாலும், ஒப்புமையாலும், அகந்தையில் சிக்கியவர்கள் கடவுளோடும் தொடர்பு கொள்ளமுடியாது. அவர்களைப் பொருத்தவரை, கடவுளும் அவர்களுக்குப் போட்டியே.
இதற்கு மாற்றாக, சொல்லப்படும் புண்ணியம், அடக்கம், பணிவு, தாழ்ச்சி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த புண்ணியத்தைப் புகழ்ந்து பல பெரியோர் பேசியுள்ளனர். தாழ்ச்சியே மற்ற அனைத்து புண்ணியங்களுக்கும் அடித்தளம், ஆதாரம் என்று புனித அகுஸ்தின் கூறியுள்ளார். அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் என்று ஆரம்பமாகும் அடக்கமுடைமை என்ற பிரிவில், அழகிய பத்து குறள்களை நமது சிந்தையில் பதிக்கிறார் திருவள்ளுவர்.

இறைவாக்கினர் எசாயா, திருத்தூதர்கள் பவுல், பேதுரு என்ற மூன்று விவிலியத்தூண்களும் உள்ளத் தாழ்ச்சியோடு தங்களைப்பற்றிக் கூறும் வார்த்தைகளை இன்றைய ஞாயிறு வாசகங்கள் தாங்கி வருகின்றன.
முதல் வாசகத்தில் இறைவனின் மாட்சியைக் கண்ணாரக் கண்டு எசாயா கூறும் வார்த்தைகள் இவை: எசாயா 6:5 - தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான். தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்.
இரண்டாம் வாசகத்தில், இயேசு, திருத்தூதர்கள் பலருக்குக் காட்சியளித்ததை வரிசைப்படுத்திச் சொல்லும் பவுல், இறுதியாக, தனக்கும் தோன்றினார் என்பதை இவ்வாறு கூறுகிறார்: 1 கொரி. 5:8 - எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார். நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப்பெறத் தகுதியற்றவன். ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான்.

இயேசு, பேதுருவின் படகில் ஏறி போதித்தபின், அவர்களை அந்த நடுப்பகலில் மீன்பிடிக்கச் சொன்ன அந்த நிகழ்ச்சி இன்றைய நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளது. பெருந்திரளான மீன்பிடிப்பைக் கண்டு, பேதுரு இயேசுவின் கால்களில் விழுந்து கூறும் வார்த்தைகள் இவை: லூக்கா 5:8: - ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்
எசாயா, பவுல், பேதுரு என்ற மூவருமே உள்ளத்தின் நிறைவிலிருந்து, தங்களைப்பற்றி கொண்டிருந்த உண்மையான பெருமையிலிருந்து பேசிய வார்த்தைகள் இவை. தன்னிரக்கத்தில், வேதனையில், இயலாமையில் தங்களையே வெறுத்து, தங்களையே தாழ்த்திச் சொன்ன வார்த்தைகள் அல்ல. இது நமக்குத் தரும் முக்கியமான பாடம்: தாழ்ச்சி அல்லது, பணிவு என்பது உள்ள நிறைவிலிருந்து, உண்மையான பெருமையிலிருந்து வரும்போதுதான் உண்மையாக இருக்கும், உண்மையாக ஒலிக்கும்.
தன்னிறைவு, தன்னைப்பற்றிய தெளிவு, தன்னைப் பற்றிய உண்மையான பெருமை இவை இல்லாதபோது, அடுத்தவர்களை எப்போதும் நமக்குப் போட்டியாக நினைப்போம். இந்தப் போட்டியைச் சமாளிக்க, ஒன்று நம்மையே அதிகமாகப் புகழ வேண்டியிருக்கும் அல்லது, மிகவும் பரிதாபமாக போலித் தாழ்ச்சியுடன், போலிப் பணிவுடன் நடிக்க வேண்டியிருக்கும்.

போலித் தாழ்ச்சிபற்றி பல கதைகள் உண்டு. அவற்றில் இதுவும் ஒன்று:
இஸ்லாமிய அறிஞர் நஸ்ருதீன் ஒருநாள் தொழுகைக் கூடத்தில் வேண்டிக் கொண்டிருந்தபோது, இவ்வுலகில் தான் எவ்வளவு சிறியவன் என்ற எண்ணம் அவரை ஆக்கிரமித்தது. அவர் உடனே தரையில் விழுந்து, கடவுளிடம், "நான் ஒன்றுமில்லாதவன்! நான் ஒன்றுமில்லாதவன்!" என்று உரக்கக் கத்தினார்.
அவ்வூரில் வாழ்ந்த ஒரு பெரும் செல்வந்தர் அந்நேரம் தொழுகைக் கூடத்தில் இருந்தார். அவர் எப்போதும் அடுத்தவர்களின் பார்வையில் உயர்ந்தவராகத் தெரியும்படி வாழ்ந்து வந்தவர். நஸ்ருதீன் உரத்தக் குரலில் சொல்லிய வார்த்தைகள் அவரது காதில் விழவே, அவர் சுற்றிலும் பார்த்தார். அங்கிருந்தோர் கவனமெல்லாம் நஸ்ருதீன் மீது திரும்பியிருந்ததைக் கண்ட அவர், உடனே விரைந்து சென்று நஸ்ருதீன் அருகில் அமர்ந்து, "நான் ஒன்றுமில்லாதவன்! நான் ஒன்றுமில்லாதவன்!" என்று உரக்கக் கத்தினார்.
அந்நேரம், தொழுகைக் கூடத்தைச் சுத்தம் செய்வதற்காக, ஓர் ஏழைப் பணியாள் அங்கே வந்தார். அவரும் நஸ்ருதீன் அருகே அமர்ந்து, "நான் ஒன்றுமில்லாதவன்! நான் ஒன்றுமில்லாதவன்!" என்று உரக்கச் சொன்னார். இதைக் கண்ட செல்வந்தர், நஸ்ருதீனைத் தன் முழங்கையால் இடித்து, "'நான் ஒன்றுமில்லாதவன்' என்று சொல்பவர் யார் என்று பாருங்கள். இதை யார் சொல்வது என்ற விவஸ்தையே இல்லாமல் போயிற்று" என்றார்.

அகந்தையில் சிக்கி, கிறிஸ்தவர்களை அழித்து வந்த சவுல், இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு, திருத்தூதர் பவுலாக மாறியபின், உண்மையான உள்ள நிறைவோடும், பெருமையோடும், அதே நேரம் பணிவோடும் சொன்ன வார்த்தைகள் நமது சிந்தனைகளை இன்று நிறைவு செய்யட்டும்.
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 12: 9-10
கிறிஸ்து என்னிடம், “என் அருள் உனக்குப் போதும்: வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும் என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும். ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.








All the contents on this site are copyrighted ©.