2013-02-08 16:06:43

சிரியாவில் நீதியான அமைதிக்காக நோன்பு


பிப்.08,2013. சிரியாவில் அப்பாவி குடிமக்கள் எதிர்கொள்ளும் துன்பங்களை உலகினரின் கவனத்துக்குக் கொண்டு வரவும், சிரியாவிலும் அதைச் சுற்றியுள்ள நாடுகளிலும் துன்புறும் அகதிகளுடன் ஒருமைப்பாட்டுணர்வைக் காட்டவுமென, இவ்வாண்டு தவக்காலத்தில் ஒரு புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவிருக்கின்றது பன்னாட்டு Pax Christiஅமைப்பு.
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தோடு இணைந்துவரும் விதத்தில், இம்மாதம் 13ம் தேதி முதல் வருகிற மார்ச் 31ம் தேதிவரை, “உணவே வாழ்வு” என்ற செயல்முறையை நடத்தத் திட்டமிட்டுள்ளது Pax Christi அமைப்பு.
செபம் மற்றும் நோன்பு மூலம் இந்தத் தங்களது முயற்சியை செயல்படுத்தவிருப்பதாகக் கூறும் இவ்வமைப்பு, இதற்கு உலகினர் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுள்ளது.
கடின வாழ்வை எதிர்நோக்கும் சிரியாவின் 6 இலட்சத்துக்கு மேற்பட்ட அகதிகளுக்கு உதவுமாறு, ஐ.நா., ஐரோப்பிய சமுதாய அவை மற்றும் பிற அரசுகளையும் அரசு சாரா நிறுவனங்களையும் கேட்டுள்ளது Pax Christi அமைப்பு.
சுதந்திரத்தை வலியுறுத்தும் மக்களைத் தண்டிப்பதற்காக சிரியா அரசு மக்களுக்கு உணவு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது என்றும் இவ்வமைப்பு குறை கூறியது.







All the contents on this site are copyrighted ©.