2013-02-08 16:10:12

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த அனைத்துலக மனித உரிமைகள் நிறுவனம் எதிர்ப்பு


பிப்.08,2013. இலங்கையில், மனித உரிமை மீறல்கள் நடப்பதால், அந்நாட்டில் இவ்வாண்டில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை மற்றொரு நாட்டில் நடத்த வேண்டும் என, ஓர் அனைத்துலக மனித உரிமைகள் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நியூயார்க்கில் உள்ள அனைத்துலக மனித உரிமைகள் நிறுவனம், இது குறித்து, காமன்வெல்த் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இலங்கையில், 2009ம் ஆண்டில், தமிழ் விடுதலைப்புலிகளுடன் நடந்த சண்டையில், போர்க் குற்றம் புரிந்த வீரர்கள்மீது, அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், அந்நாட்டின் தலைமை நீதிபதி, கண்டனத் தீர்மானம் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவை போன்ற மனித உரிமை மீறல்களை இலங்கை அரசு நிறுத்தாவிட்டால், காமன்வெல்த் மாநாட்டை வேறு நாட்டில் நடத்த வேண்டும் என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில், வருகிற நவம்பரில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவதற்கு முன்னதாக, வருகிற ஏப்ரலில் காமன்வெல்த் நாடுகளின் அதிகாரிகள் கூட்டம் நடக்கவுள்ளது.
இலங்கை அரசு போர்க் குற்றவாளிகளை விசாரிக்கத் தவறியது தொடர்பாக, அவ்வரசுக்கு எதிராக, மற்றொரு கண்டனத் தீர்மானத்தை, ஐ.நா.வின் அனைத்துலக மனித உரிமைகள் நிறுவனத்தில் தாக்கல் செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடருவதால், காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக, கனடா அரசு ஏற்கனவே எச்சரித்துள்ளதாக ஊடகச் செய்தி ஒன்று கூறியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.