2013-02-07 16:03:03

ஸ்காட்லாந்தில் உருவாக்கப்பட்டுள்ள நான்கு அடி குறுக்களவு கொண்ட மாபெரும் செபமாலை


பிப்.07,2013. நடைபெற்று வரும் நம்பிக்கை ஆண்டின் ஒரு முயற்சியாக, ஸ்காட்லாந்தில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு மாபெரும் செபமாலை, பிப்ரவரி 8, இவ்வெள்ளிக்கிழமை கர்தினால் Keith O’Brien அவர்களால் அர்ச்சிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமான இச்செபமாலை ஒவ்வொரு பள்ளிக்கும், பங்குத்தளத்திற்கும் செல்லும்போது, அவ்விடங்களின் நம்பிக்கை மீண்டும் புத்துயிர் பெறுவது உறுதி என்று கர்தினால் O’Brien கூறினார்.
நம்பிக்கை ஆண்டும், புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியும் இணையும் ஒரு முக்கியமான தளம் கத்தோலிக்கக் குடும்பங்கள் என்று கூறிய ஸ்காட்லாந்து ஆயர்கள் பேரவையின் தலைவர் பேராயர் Philip Tartaglia, இக்குடும்பங்களை இணைக்கும் சிறந்த கருவி செபமாலையே என்றும் எடுத்துரைத்தார்.
ஸ்காட்லாந்தில் உள்ள Mission Matters என்ற ஓர் அமைப்பு, மறைபரப்புப் பணிக்கென நிதிதிரட்டி அதை வத்திக்கானுக்கு அனுப்பி வருகின்றது. இவ்வமைப்பின் ஒரு முயற்சியாக, நான்கு அடி குறுக்களவு கொண்ட ஒரு வட்ட வடிவில் இச்செபமாலை உருவாக்கப்பட்டுள்ளது.
உலகின் ஐந்து கண்டங்களைக் குறிக்கும்படி, ஐந்து வண்ண மணிகளில் உருவாக்கப்பட்டுள்ள இச்செபமாலையில், ஒவ்வொரு மணியும் ஒரு டென்னிஸ் பந்து அளவில் உள்ளதென்றும், இதன் சிலுவை இரண்டடி உயரம் கொண்டதென்றும் சொல்லப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.