2013-02-07 15:49:20

மூன்றாம் உலக இளையோர், மேற்கத்தியக் கலாச்சாரத்திற்கு ஒரு சவாலாகவும், படிப்பினையாகவும் உள்ளனர் - திருத்தந்தை


பிப்.07,2013. ‘இளையோர் கலாச்சாரம்’ என்பதை வரையறுக்க, பன்முகக் கண்ணோட்டங்களும், செயல்பாடு யுக்திகளும் தேவை என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
பிப்ரவரி 6, இப்புதன் முதல் வருகிற சனிக்கிழமை முடிய உரோம் நகரில் நடைபெறும் கலாச்சாரத் திருப்பீட அவையின் ஆண்டு நிறைவுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருக்கும் உறுப்பினர்களை இவ்வியாழன் மதியம் வத்திக்கானில் சந்தித்தத் திருத்தந்தை, இளையோர் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ள விழையும் அனைவரின் ஆவலையும் பாராட்டினார்.
அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களால் இளையோர் கலாச்சாரம் ஒரு நிலையற்றத் தன்மையை உணர்ந்து வருகின்றது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, வேலைகள் இல்லாமை என்றச் சூழல் இளையோரின் மனநிலையையும், உறவுகளையும் பாதிக்கும் ஆபத்தையும் எடுத்துரைத்தார்.
இத்தகைய நிலையற்ற தன்மை, இளையோரிடையே போதைப் பொருள் பயன்பாடு, வன்முறை மற்றும் பிற சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகளில் ஈடுபட வைக்கிறது என்பதையும் திருத்தந்தை வருத்தத்துடன் எடுத்துக் கூறினார்.
இத்தகையச் சூழலிலும், பல இளையோர் வீரமுடன், தாராள மனதுடன் தேவையில் இருப்போர் துயர் துடைப்பதற்கு முன்வருவதையும் நாம் காண்பது நமக்கு நம்பிக்கையைத் தருகிறது என்று கூறினார் திருத்தந்தை.
இளையோரின் கலாச்சாரம் என்பதைப் புரிந்துகொள்வதற்கு, மாறுபட்ட வகையில் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் இளையோரைத் தகுந்த கண்ணோட்டத்துடன் நோக்குவது நமக்குள்ள ஒரு சவால் என்றும் திருத்தந்தை வலியுறுத்தினார்.
'மூன்றாம் உலக' இளையோரைப் பற்றி குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, நுகர்வுக் கலாச்சாரத்தில் மூழ்கிப் போயிருக்கும் மேற்கத்தியக் கலாச்சாரத்திற்கு மூன்றாம் உலக இளையோர் ஒரு சவாலாகவும், படிப்பினையாகவும் உள்ளனர் என்று சுட்டிக்காட்டினார்.
திருஅவையும் திருத்தந்தையரும் இளையோர் மட்டில் கொண்டிருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை, இந்த நம்பிக்கை ஆண்டில் இன்னும் ஆழமாக மாற இந்த ஆண்டுக்கூட்டம் வழிவகுக்கட்டும் என்று கூறியத் திருத்தந்தை, கலாச்சாரத் திருப்பீட அவையின் அங்கத்தினர்களுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.








All the contents on this site are copyrighted ©.