2013-02-07 16:00:11

கிறிஸ்துவின் சீடர்கள் என்ற அடிப்படையில், பணிபுரிவதை வேறு எதற்காகவும் நாம் விட்டுக்கொடுக்க இயலாது - கர்தினால் Oswald Gracias


பிப்.07,2013. திருஅவையின் மையமான விழுமியம் பணிபுரிவதே; எனவே, கிறிஸ்துவின் சீடர்கள் என்ற அடிப்படையில், பணிபுரிவதை வேறு எதற்காகவும் நாம் விட்டுக்கொடுக்க இயலாது என்று இந்திய ஆயர்கள் பேரவையின் தலைவர் கர்தினால் Oswald Gracias கூறினார்.
"திருஅவை, பணிபுரியும் குடும்பம்" என்ற மையக் கருத்துடன் வேளாங்கண்ணித் திருத்தலத்தில் இச்செவ்வாய் முதல் நடைபெற்று வரும் இந்திய இலத்தீன் ரீதி கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் 25வது கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் Gracias இவ்வாறு கூறினார்.
மத்தேயு நற்செய்தி 20: 28ல் கூறியுள்ள, "மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்" என்ற வார்த்தைகளை மேற்கோளாகக் கூறி, கிறிஸ்துவின் ஒவ்வொரு சீடருக்கும் வழங்கப்பட்டுள்ள அடிப்படை மதிப்பீடு பணிபுரிவதே என்று கூறினார் கர்தினால் Gracias.
ஊழல்கள் அற்ற இந்தியாவை உருவாக்குவதும், வறுமை ஒழிப்பு, வேறுபாடுகளை நீக்குதல், கல்வியறிவின்மையைக் களைதல் ஆகியவையே, இந்தியத் திருஅவைக்கு வழங்கப்பட்டுள்ள தலையாயப் பணிகள் என்று கர்தினால் Gracias தன் உரையில் வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.