2013-02-07 15:19:17

கற்றனைத்தூறும்... சூயஸ் கால்வாய்


சூயஸ் கால்வாய் என்பது, மத்தியதரைக் கடலையும், செங்கடலின் வடபகுதியான சூயஸ் வளைகுடாவையும் இணைக்கும் செயற்கைக் கால்வாய் ஆகும். இக்கால்வாய் வெட்டப்பட்டதால் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான கப்பற்போக்குவரத்து மிக இலகுவானது. தற்போதைய சூயஸ் கால்வாய்ப் பகுதியில் கி.மு.13ம் நூற்றாண்டில் முதல் கால்வாய் வெட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆயினும் இதனைப் பயன்படுத்துவது கி.பி.8ம் நூற்றாண்டில் முற்றிலும் நிறுத்தப்பட்டது. ப்ரெஞ்ச் பேரரசர் Napoleon Bonaparte எகிப்தில் கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டபோது, 1799ம் ஆண்டில் முதல் நவீன கால்வாய்க் கட்டும் பணிக்கு முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் மத்தியதரைக் கடல்மட்ட அளவையும், செங்கடல் மட்ட அளவையும் தவறாக அளந்த காரணத்தினால் இக்கால்வாய் கட்ட முடியாமல் போனது. மீண்டும் பிரான்ஸ் நாட்டினர் 1800களின் மத்தியில் முயற்சிகள் எடுத்ததன் பயனாக, 1859ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி கட்டுமானப் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கின. 10 கோடி டாலர் செலவில் கட்டி முடிக்கப்பட்டு 1869ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. இக்கால்வாய் 163 கி.மீ நீளமும் 300 மீ அகலமும் கொண்டது. இக்கால்வாயின் வெற்றியே, பிரான்சு நாட்டினரை பனாமா கால்வாயை அமைக்கத் தூண்டியது. சூயஸ் கால்வாயை ஓராண்டில், ஏறக்குறைய 15 ஆயிரம் கப்பல்கள் கடந்து செல்கின்றன. 19மீட்டர் உயரம், 2,10,000 டன் எடையுள்ள கப்பல்கள் இக்கால்வாய் வழியாகச் செல்ல முடியும். இந்தப் பாதையில் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மூலம் எகிப்துக்கு, ஆண்டு ஒன்றுக்கு ஏறக்குறைய 500 கோடி டாலர் வருமானம் கிடைக்கிறது. ஒவ்வொரு கப்பலும் இக்கால்வாயைக் கடக்க 16 மணி நேரம்வரை ஆகிறது.







All the contents on this site are copyrighted ©.