2013-02-06 15:25:11

பிப்.07. கற்றனைத்தூறும்...... காளான்


காளான் என்பது மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைதாவர உயிரினம் ஆகும். பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான காளான் பல தரப்பட்ட சூழல்களிலும் வளரக் கூடியது. முன்பு ஆசிய நாடுகளில் காளான்கள் ஏழை மக்களின் உணவாக இருந்தது. தற்போது இவை குடிசைத்தொழிலாக, செயற்கையாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது. காளான் வளர்ப்பு சிறந்த வருவாய் ஈட்டித்தரும் எளிய தொழிலாக உள்ளது. இவற்றில் நல்லவை கெட்டவை என இலட்சத்துக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளதாகக் கணக்கிட்டு உள்ளனர். சில வகைக் காளான்கள் சத்துள்ளவையாகவும், சிலவகை நச்சுத்தன்மை கொண்டு உண்பவர்களுக்கு தீங்கு விளைவிப்பவையாகவும் காணப்படுகின்றன.
காளான்கள் முட்டை வடிவிலிருந்து கண்ணுக்குப் புலப்படாத நுண்ணளவுவரை பலவகை வடிவங்களில் கிடைக்கின்றன. நாய்க்குடைக் காளான், முட்டைக் காளான், சிப்பிக்காளான், பூஞ்சைக் காளான் போன்றவை காளான்களில் சில வகை ஆகும்.
காளான்களுக்கு மற்ற தாவரங்களைப் போல இலை, பூ, காய் என்று எதுவும் இல்லை. எனவே, விதைத்தூள் மூலம் மட்டுமே காளான்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. இவைகளின் வளர்ச்சி எவ்வளவு விரைவாக ஏற்படுகிறதோ அவ்வளவு விரைவாக இவை அழியவும் நேரிடுகிறது.
மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான, உயிர்ச்சத்து டியை, காளானிலிருந்து அதிகமாகவும் எளிதாகவும் பெறலாம்.
கோதுமையுடன் ஒப்பிடும் போது காளான்களில் 12 மடங்கு கூடுதலான ஆன்டிஆக்சிடெண்டுகள் (நோய் தடுப்பு பொருட்கள்) காணப்படுகின்றன. இந்தக் காரணத்தால் காளான்களை ஆன்டிஆக்ஸிடென்டுகளின் தாய் என்றுகூடச் சொல்லலாம்.
பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 44%, சோடியம் 9%, புரதச்சத்து 35% உள்ளது. எனவே இதயத்தைக் காக்கும் உணவாக காளான் உள்ளது. இவைத் தவிர, காளானின் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து, மூட்டுவாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணி.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் காளான்களை உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் அதில் சர்க்கரை இல்லை என்கிறனர் நிபுணர்கள்.
காளான்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும், கொழுப்பு இல்லாததால் காளானால் உடல் பருமனும் ஏற்படுவதில்லை.
உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது. எளிதில் சீரணமாகும் தன்மை கொண்டது. மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.
காளான்களுக்கு மாபெரும் மருத்துவக் குணங்கள் இருப்பதாக இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெண்களைப் பெரிதும் தாக்கும் மார்பகப் புற்றுநோயை சுமார் 64 விழுக்காடுவரைத் தடுக்கும் வல்லமை இந்தக் காளானுக்கு உண்டாம்.
காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும். காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது.
பென்சிலின் என்ற மருந்து செய்ய பெனிசிலியம்(Penicillium) எனப்படும் நுண்ணிய பூஞ்சைக்காளான் பயன்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.