2013-02-06 16:04:45

கடவுள் எனக்கு கொடுத்த இரண்டாவது வாழ்க்கை: முதன் முறையாக மலாலா பேட்டி


பிப்.06,2013. இது கடவுள் எனக்கு வழங்கியுள்ள இரண்டாவது வாழ்க்கை, இந்த வாழ்க்கையின் மூலம் நான் மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன்; ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு பெண்ணும் கல்வியறிவை பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று பாகிஸ்தான் இளம் மாணவி Malala Yousufzai கூறினார்.
கல்வியை ஊக்குவித்த பாகிஸ்தான் மாணவி Malala Yousufzaiவைத் தலிபான்கள் கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் 9ம் தேதி துப்பாக்கியால் சுட்டனர். உயிருக்குப் போராடிய பாகிஸ்தான் மாணவி மலாலா, இலண்டனில் நடத்தப்பட்ட சிகிச்சைக்குப் பின்பு உடல் தேறி வருகிறார்.
இந்நிலையில், முதன் முதலாக ஊடகத்தினருக்கு மலாலா அளித்த பேட்டி இத்திங்களன்று ஒளிபரப்பட்டது. கீழ் உதட்டுடன் மேல் உதடு சரியாக பொருந்தாத நிலையில் சிரமப்பட்டு, ஆனால், தெளிவாக பேசிய மலாலா, தான் உயிரோடு இருப்பதற்கு முக்கியக் காரணம் உலகெங்கும் மக்கள், சிறப்பாக, பெண்கள் எழுப்பிய செபங்களே என்று கூறினார்.
பெண் கல்விக்காக மலாலா நிதி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறிய மலாலா, கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்புக்கு, பாகிஸ்தானில் இருந்து மட்டும் ரூ. 53 கோடி நிதி சேர்ந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
மலாலாவின் தலையில் ஏற்பட்ட காயங்களுக்காக மேலும் 2 அறுவை சிகிச்சைகள் கடந்த சனிக்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக மருத்துவ நிர்வாகம் அறிவித்தது.
தற்போது, இலண்டனில் வசித்து வரும் 15 வயதான மலாலாவின் பெயர் உலகின் உயரிய விருதான நோபல் அமைதி விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.