2013-02-05 16:00:20

வேளாங்கண்ணியில் இந்திய இலத்தீன்ரீதி ஆயர்கள் பேரவை கூட்டம்


பிப்.05,2013. “இந்தியாவில் திருஅவையின் மேய்ப்புப்பணித் திட்டம்” என்ற தலைப்பில் வேளாங்கண்ணியில் தொடங்கியுள்ள இந்திய இலத்தீன்ரீதி ஆயர்களின் பொதுக்கூட்டம் குறித்து நிருபர்களுக்குப் பேட்டியளித்த கர்தினால் டோப்போ, ஆயர்கள் இக்கூட்டத்தில் வகுக்கும் மேய்ப்புப்பணித் திட்டம், இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்குப் பதில் சொல்வதாய் இருக்கும் என்று கூறினார்.
இந்நிருபர் கூட்டத்தில் பேசிய கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ், 1962ம் ஆண்டில் மைனர் பசிலிக்காவாக உயர்த்தப்பட்டதன் வெள்ளிவிழாவைச் சிறப்பிக்கும் வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னை திருத்தலத்தில் இந்த ஆயர்கள் கூட்டம் நடைபெறுவது உண்மையிலேயே இறைவனது செயல் என்று கூறினார்.
இந்த நமது காலத்தில் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் பொன்விழா திருஅவைக்கு மிக முக்கியமான நிகழ்வாக அமைந்துள்ளது என்றும் கூறிய கர்தினால் கிரேசியஸ், இந்த நம்பிக்கை ஆண்டில், விசுவாசத்தின் தாயின் பாதங்களில் ஆயர்கள் கூடியிருப்பது இந்தியத் திருஅவைக்கு வரலாற்று சிறப்புமிக்க நேரம் என்றும் தெரிவித்தார்.
CCBI என்ற இந்திய இலத்தீன்ரீதி ஆயர்கள் பேரவை உருவாக்கப்பட்டதன் 25ம்ஆண்டு வெள்ளி விழா வருகிற சனிக்கிழமை சிறப்பிக்கப்படவிருக்கின்றது. அதில் திருத்தந்தையின் பிரதிநிதியாக, திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயத் தலைவர் கர்தினால் பெர்னான்டோ ஃபிலோனி கலந்து கொள்வார்.







All the contents on this site are copyrighted ©.