2013-02-05 16:02:00

வெனெசுவேலா கர்தினால் : சிறைகள், மக்கள் இறப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டுறவு அங்காடிகள் அல்ல


பிப்.05,2013. சிறைகள், மக்கள் இறப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டுறவு அங்காடிகள் என்ற எண்ணத்தில் வெனெசுவேலா நாட்டு மக்கள் பழக்கப்பட்டுவிடக் கூடாது என்று தலைநகர் கரகாஸ் கர்தினால் Jorge Urosa Savino கேட்டுக் கொண்டார்.
வெனெசுவேலா நாட்டின் உரிபானாவிலுள்ள சிறையில் கடந்த சனவரி 30ம் தேதி ஏற்பட்ட கலவரத்தில் குறைந்தது 58 பேர் இறந்தனர் மற்றும் 90க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதையொட்டி உள்ளூர் பத்திரிகைக்குப் பேட்டியளித்த கர்தினால் Urosa Savino, சிறைகள் சீர்திருத்த மையங்கள், மறுவாழ்வு மையங்கள் மற்றும் கைதிகளை சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைக்கும் மையங்கள் என்று கூறினார்.
சிறையிலுள்ள மக்களின் வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் அந்நாட்டின் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிட்ட கர்தினால் Urosa Savino, சிறையை மூடுவது இவ்விவகாரத்துக்குத் தீர்வாக அமையாது, மாறாக, அதிகமான சிறைகளை அமைத்து விசாரணைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
சிறையிலுள்ளவர்களில் சிலர் குற்றவாளிகளாய் இருந்தாலும், கைதிகளின் மனித உரிமைகளுக்கு ஆதரவளித்து, அவர்கள் சிறைகளில் வாழும் நிலை மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் Caracas கர்தினால் Jorge Urosa Savino.







All the contents on this site are copyrighted ©.