2013-02-05 15:28:15

விவிலியத்
தேடல் – உவமைகள்: ஓர் அறிமுகம் – பகுதி 5


RealAudioMP3 வயதான பெண் ஒருவர், தன் மரணத்திற்குப் பின் நிகழும் இறுதிச்சடங்குகள் பற்றி முடிவெடுக்க விரும்பி, பங்குத்தந்தையை அணுகினார். தனக்கு இரு விருப்பங்கள் உள்ளதென்று அவர் குருவிடம் கூறினார். முதல் விருப்பம்... தன்னைப் புதைப்பதற்குப் பதிலாக, தகனம் செய்துவிடவேண்டும் என்றார். இரண்டாவது விருப்பம்... தகனம் செய்யப்பட்ட சாம்பலை அவ்வூரில் அமைந்துள்ள மிகப்பெரிய பல்பொருள் அங்காடியைச் சுற்றி தெளிக்கவேண்டும் என்றார்.
அவரது இரண்டாவது விருப்பத்தைப் புரிந்துகொள்ள முடியாத பங்குத்தந்தை, விளக்கம் கேட்டார். வயதான அந்தத் தாய், “என் பிள்ளைகள் அந்த அங்காடிக்கு அடிக்கடி செல்கின்றனர். எனவே, அந்த நேரத்திலாவது அவர்கள் என்னை அங்கு சந்திக்க முடியுமே, அதனால்தான்” என்று விளக்கம் சொன்னார்.
மேலோட்டமாகப் பார்த்தால், இது ஒரு வேடிக்கை கதையாகத் தோன்றுகிறது. ஆனால், இன்னும் சிறிது ஆழமாகச் சிந்தித்தால், அந்த வயதானத் தாயின் இரண்டாவது விருப்பம், பல சூடான, வேதனையான பாடங்களைச் சொல்லித் தருவதையும் உணரலாம். சென்ற வாரம் மின்னஞ்சலில் வந்த இந்தக் கதையை நான் வாசித்தபோது, இயேசு இன்று நம்மிடையே இருந்தால், இக்கதையைச் சொல்லியிருப்பாரா என்ற கேள்வி என்னையும் அறியாமல் எனக்குள் எழுந்தது.
வயதான பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் உள்ள உண்மை உறவு நிலையை நேரடியாகச் சொல்லாமல், மறைமுகமாகச் சொல்லும் கதை இது. இன்றைய உலகில் நிலவும் இந்த நிலையைச் சுட்டிக்காட்ட, இதையொத்த ஒரு கதையை இயேசு கட்டாயம் சொல்லியிருப்பார் என்றே எனக்குத் தோன்றுகிறது.

கடந்த 4 வாரங்களாக விவிலியத்தேடலில் கதைகளின் சக்தியைப்பற்றி சிந்தித்து வந்துள்ளோம். நமக்கும் உண்மைக்கும் இடைப்பட்ட மிகக் குறுகியத் தூரம் கதைகள்; கதைகளின் வழியே சொல்லப்படும் உண்மைகளுக்கு வரவேற்பு இருக்கும்; கதைகள் மீண்டும் நம்மை குழந்தைகளாக்கும்; கதைகளுக்குக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு... என்று கதைகளின் சக்தியைப் பல்வேறு கோணங்களில் சிந்தித்து வந்துள்ளோம்.
இச்சக்தியை முற்றிலும் உணர்ந்த இறைமகன் இயேசு, உவமைகள் வழியே பல ஆழமான உண்மைகளை நமக்கு விட்டுச் சென்றுள்ளார். இயேசுவின் உவமைகள், கதை வடிவிலும் உள்ளன; கதைகள் அல்லாமல், வெறும் ஒப்புமைகளாகவும், உருவகங்களாகவும் உள்ளன.

இயேசுவின் உவமைகள் என்று தனித்து சிந்திப்பதற்கு முன், உவமைகள் என்றால் என்ன என்பதைச் சிறிது தெளிவுபடுத்துவது நல்லது. 'உவமைகள்' என்ற வார்த்தையின் பொருள் என்ன? ஆங்கிலத்தில் 'Parable' என்று வழங்கப்படும் இவ்வார்த்தை, இரு கிரேக்க வார்த்தைகளின் இணைப்பு. Para + Ballo என்ற இரு வார்த்தைகள் அவை. 'Para' என்றால், 'அருகே' என்றும்; 'Ballo' என்றால், 'எறிதல்' அல்லது 'வைத்தல்' என்றும் பொருள். அருகருகே இரு எண்ணங்களை வைத்துப் பேசுதல் என்பதே, 'Parable' என்ற வார்த்தையின் பொருள்.
சாதாரண, மிக, மிக எளிய மனித அனுபவங்களையும், மனித எண்ணங்களைக் கடந்த மறையுண்மைகளான இறையரசு, மற்றும் தந்தையாம் இறைவன் போன்ற கருத்துக்களையும் தன் உவமைகள் வழியே அருகருகே வைத்தார் இயேசு. புதிய ஏற்பாட்டு ஆய்வாளர்களில் புகழ்பெற்ற C.H.Dodd என்பவர் எழுதிய 'இறையரசின் உவமைகள்' (The Parables of the Kingdom) என்ற நூலில், உவமைகளைப் பற்றிய இலக்கணத்தை இவ்விதம் கூறுகிறார்: “At its simplest, the parable is a metaphor or simile drawn from nature or common life, arresting the hearer by its vividness or strangeness, and leaving the mind in sufficient doubt about its precise application to tease it into active thought.” "இயற்கையிலிருந்தோ, இயல்பு வாழ்விலிருந்தோ எடுக்கப்பட்ட ஓர் எடுத்துக்காட்டு உவமையாகிறது. இது, கேட்போரிடையே ஆர்வத்தைத் தூண்டுகிறது; கேள்விகளை எழுப்புகிறது... மொத்தத்தில், ஓர் உவமை, கேட்போரைச் சிந்திக்க அழைக்கிறது."

Klyne Snodgrass என்ற விவிலியப் பேராசிரியர், இயேசுவின் உவமைகள் பற்றிய சிறந்த நூல் ஒன்றை 2008ம் ஆண்டு வெளியிட்டார். "குறிக்கோளுடன் சொல்லப்படும் கதைகள்: இயேசுவின் உவமைகளுக்கு ஒரு முழுமையான வழிகாட்டி" (Stories with Intent: A Comprehensive Guide to the Parables of Jesus) என்ற இந்நூலில், ஆசிரியர் Snodgrass இயேசுவின் உவமைகளில் காணப்படும் பல சிறப்பு அம்சங்களை விவரித்துள்ளார். அவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் நமது தேடலில் இன்று குறிப்பிடுவோம்.

1. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் தன்மை கொண்டவை இயேசுவின் உவமைகள். 'கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லை' என்ற பழமொழிக்கேற்ப, இயேசு கூறிய பெரும்பாலான உவமைகள், வார்த்தை அளவில் குறைவானவை என்றாலும், அவை வழியே சொல்லப்பட்டுள்ள எண்ணங்கள் உள்ளத்தை ஊடுருவும் சக்தி பெற்றவை. தேவையற்ற விவரங்கள், விளக்கங்கள் இல்லாமல் சொல்லப்பட்டுள்ள கதைகள் இவை. எடுத்துக்காட்டாக, ஊதாரிப்பிள்ளை அல்லது, காணமற்போன மகன் என்ற புகழ்பெற்ற உவமையில், அக்குடும்பத்தின் அன்னையைப் பற்றி எதுவுமே கூறப்படவில்லை. ஏனெனில், இயேசு கூறவந்த உண்மைக்கு இந்த விவரம் தேவைப்படவில்லை.

2. இயேசு பயன்படுத்திய அனைத்து உவமைகளும் மனித வாழ்வுடன் நேரடித் தொடர்புடையவை. வேறு கற்பனை உலகங்கள் இங்கு படைக்கப்படவில்லை. பல்வேறு மதங்களிலும், கலாச்சாரங்களிலும் கற்பனைக் கதைகள் பல உள்ளன. இக்கதைகளில் மிருகங்கள், பறவைகள், மரங்கள் என, பல உயிரினங்களும் மனிதர்களைப்போல பேசுவதையும், செயல்படுவதையும் காணலாம்.
காகம் ஒன்றை ஏமாற்றி, வடையைப் பறித்துச் சென்ற நரியின் கதை, புறாவும் எறும்பும் நட்பு கொள்ளும் கதை, தண்ணீரில் தெரியும் பிம்பத்தை மற்றொரு சிங்கமென்றெண்ணி கிணற்றில் பாய்ந்து மடியும் சிங்கத்தின் கதை, என்று பல்வேறு கதைகள் கற்பனை கலந்து சொல்லப்பட்டவை. இவை அனைத்துமே நன்னெறியைக் கூறும் கதைகள். நன்னெறிகளை, இறை உண்மைகளைக் கூற இயேசு பயன்படுத்திய அத்தனை உவமைகளும் சாதாரண, எளிய மனித அனுபவங்களைப் பிரதிபலிக்கும் கதைகளாக, உவமைகளாக அமைந்தன. வேறு கற்பனைக் கலப்படம் இங்கு இல்லை.

3. இயேசுவின் உவமைகள் கேட்போரைத் தன் வயப்படுத்தும் தன்மை கொண்டவை. தன் படிப்பினையில் மக்களை இன்னும் ஆர்வமாய் ஈடுபடுத்தும் நோக்கத்துடன், இயேசு தன் உவமைகள் சிலவற்றை கேள்விகளுடன் துவக்கினார். லூக்கா நற்செய்தி 15ம் பிரிவிலும், மத்தேயு நற்செய்தி 21ம் பிரிவிலும் நாம் காணும் எடுத்துக்காட்டுகள் இதோ:
லூக்கா 15: 3-4
அப்போது இயேசு அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா?”
எதோ ஓர் ஊரில், யாரோ ஒருவரிடம் நூறு ஆடுகள் உள்ளதென்று தன் உவமையை ஆரம்பிக்காமல், உங்களுள் ஒருவரிடம் நூறு ஆடுகள் இருந்தால் என்று ஆரம்பிக்கிறார்.
மத்தேயு 21: 28
மேலும் இயேசு, “இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், ‘மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்என்றார்.”
இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வியுடன் இயேசு தன் உவமையை ஆரம்பித்ததும், அங்கிருந்தோரின் கவனமெல்லாம் ஈர்க்கப்பட்டிருக்கும்
என்பதில் ஐயம் இல்லை.
ஒரு சில நேரங்களில், இயேசு தன் உவமைகளைக் கூறி முடித்ததும், "கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" (மாற்கு 4: 9) என்று முடிக்கிறார். இதை ஓர் அழைப்பாக, புதிராக நாம் கருதலாம். தன் சொற்களைக் கேட்ட மக்கள் தொடர்ந்து சிந்திக்க வேண்டும் என்ற தூண்டுதலை இயேசு உவமைகள் வழியே உருவாக்கினார்.

4. இயேசு கூறிய பல முக்கியமான உவமைகளில் 'புரட்டிப் போடுதல்' என்ற யுக்தியைப் பயன்படுத்தினார். இதுவே இயேசு கூறிய உவமைகளில் பொதிந்திருக்கும் மிக முக்கியமான அம்சம் என்று பல விவிலிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது, இஸ்ரயேல் மக்கள் அதுவரை நம்பி வந்த, அல்லது அவர்கள் மதத்தலைவர்கள் மூலம் கற்றுவந்த கருத்துக்களைத் தலைகீழாக மாற்றினார் இயேசு.
உலகப் புகழ்பெற்ற 'நல்ல சமாரியர்' உவமையில், (லூக்கா 10: 25-37) உயர் நிலையில் உள்ளவர்கள் என்று கருதப்பட்ட குரு, லேவியர் ஆகியோரைவிட, சமுதாயத்தின் கடைநிலைக்குத் தள்ளப்பட்ட சமாரியரே சிறந்தவர் என்று இயேசு சொல்லாமல் சொன்னது, அன்று மட்டுமல்ல, இன்றும் அதிர்ச்சியூட்டும் உண்மைதானே!
செல்வரும் இலாசரும் என்ற உவமையில், (லூக்கா 16: 19-31) ஏழை இலாசர் விண்ணகம் சென்றார் என்றும், செல்வர் பாதாளத்தில் வதைக்கப்பட்டார் என்றும் இயேசு கூறியது மக்களின் சிந்தனைகளை வெகுவாகப் புரட்டிப் போட்டிருக்கும்.
கோவிலில் வேண்டச்சென்ற பரிசேயரும், வரிதண்டுபவரும் என்ற உவமையின் இறுதியில், இயேசு கூறிய முடிவு, சுற்றியிருந்தோரைக் கட்டாயம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும்.
லூக்கா 18: 14
இயேசு, “பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்என்றார்.

இறைவன் வகுத்த நீதி, மனித சமுதாயத்தின் பல்வேறு தவறான முயற்சிகளால் தலைகீழாக்கப்பட்டது. அதை மீண்டும் இயல்பான நிலைக்கு உயர்த்துவதே இறையரசு என்ற ஆழமான, அழகான உண்மையை இயேசு தன் உவமைகளில் வெளிக்கொணர்ந்தார். சமுதாயத்தைப் புரட்டிப்போடும் மாற்றங்களைக் கொணர்ந்த இயேசுவின் உவமைகளை இனிவரும் விவிலியத்தேடல்களில் ஒவ்வொன்றாக அலசுவோம்.








All the contents on this site are copyrighted ©.