2013-02-05 16:00:10

இந்தியத் திருப்பீடத்தூதர் : இந்தியத் திருஅவை, கிறிஸ்துவில் கொண்டுள்ள நம்பிக்கையையும் விசுவாசத்தையும் ஊன்றி வளரச்செய்ய வேண்டும்


பிப்.05,2013. அகில இந்திய கத்தோலிக்க இலத்தீன்ரீதி ஆயர்கள் பேரவையின் 25வது பொதுக்கூட்டம் தமிழகத்தின் வேளாங்கண்ணியில் இச்செவ்வாயன்று தொடங்கியுள்ளது.
இதன் தொடக்க நிகழ்வாக, இந்தியாவுக்கான திருப்பீடத்தூதர் பேராயர் சால்வத்தோரே பென்னாக்கியோ, வேளாங்கண்ணி ஆரோக்ய திருத்தலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆயர்களுடன் கூட்டுத் திருப்பலி நிகழ்த்தினார்.
இத்திருப்பலியில் மறையுரையில் பேராயர் பென்னாக்கியோ, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் பொன்விழாக் காலத்தில் நம்பிக்கை ஆண்டைச் சிறப்பித்துவரும் நாம், கிறிஸ்துவில் நாம் கொண்டுள்ள நம்பிக்கையையும் விசுவாசத்தையும் ஊன்றி வளரச்செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினார்
இத்திருப்பலிக்குப் பின்னர் காலை 10 மணியளவில் பொதுக்கூட்டம் ஆரம்பமானது. இதில் CCBI பேரவையின் தலைவர் ராஞ்சி பேராயர் கர்தினால் டெலஸ்போர் டோப்போ தொடக்கவுரையாற்றினார். மேலும், இக்கூட்டத்தின் முக்கிய கருத்துக்கள் குறித்து உரையாற்றிய மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ், இந்தியாவில் திருஅவையின் மேய்ப்புப்பணி குறித்து ஆயர்கள் சிந்திக்குமாறு கேட்டுக்கொண்டார்.
பிப்ரவரி 5, இச்செவ்வாயன்று தொடங்கியுள்ள இக்கூட்டம், பிப்ரவரி 10, இஞ்ஞாயிறன்று நிறைவடையும். “இந்தியாவில் திருஅவையின் மேய்ப்புப்பணித் திட்டம்” என்ற தலைப்பில் நடைபெறும் இக்கூட்டத்தில், ஆயர்கள், வல்லுனர்கள் மற்றும் ஆயர் பணிக்குழுக்களின் செயலர்கள் என 160 பேர் கலந்து கொள்கின்றனர்.
வேளாங்கண்ணி திருத்தலம், மைனர் பசிலிக்காவாக உயர்த்தப்பட்டதன் வெள்ளிவிழா சிறப்பிக்கப்படும் இஞ்ஞாயிறன்று, அங்குப் புதிதாகக் கட்டப்பட்டுள்ள விடியற்கால விண்மீன் ஆலயத்தை திருநிலைப்படுத்துவார் கர்தினால் பெர்னான்டோ ஃபிலோனி.
(செய்தித் தொடர்பாளர் - புனித பேதுரு குருத்துவக் கல்லூரி பேராசிரியர் அருள்பணி பெரியண்ணா)







All the contents on this site are copyrighted ©.