2013-02-04 16:01:47

வாரம் ஓர் அலசல் - பழக்கங்கள் பலமானவை


பிப்.04,2013 RealAudioMP3 . இந்துமத நண்பர்களின் மிகப்பெரிய தெய்வீகத் திருவிழாவான கும்பமேளா, கங்கை, யமுனை, சரஸ்வதி (கண்களுக்குத் தெரியாமல் பூமிக்கு அடியில் ஓடுவதாக நம்பப்படும்) ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் அலகாபாத்தில் கடந்த சனவரி 14ம் தேதியன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நதிகள் சங்கமிக்கும் இவ்விடத்தில் நீராடினால் பாவங்கள் தீரும் என்ற நம்பிக்கையில் கோடிக்கணக்கான பக்தர்கள் நீராடி வருகின்றனர். இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தில், இணையதளங்களில் ஆசீர்வாதங்கள் பெறும் இ-தர்ஷன்(darshan) வழிகளும் இருக்கின்றனவாம். இந்த ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு முன்பதிவு செய்யலாம். அவற்றைப் பதிவிறக்கம் செய்யும் வசதிகளையும் சிலர் தருகின்றனராம். பிரபல ஊடகம் ஒன்றின் இஞ்ஞாயிறு செய்தியில் இந்தத் தகவலை வாசித்தோம். அதோடு, இந்தியாவில் ஓர் ஆன்மீக மையத்தில், தூய்மை அடைந்ததற்கானச் சான்றிதழ் தருகின்றனர்(3 Feb.2013 : A certificate for holiness in India) என்ற தகவலும் அந்த ஊடகச் செய்தியில் இருந்தது. Gautameshwar திருப்பயணிகள் மையத்திலுள்ள ஆலயக் குருக்கள் இந்தச் சான்றிதழைக் கொடுக்கின்றனர் என வாசித்தோம். அதை, அன்பர்களே, உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
மத்திய பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களுக்கு இடையேயுள்ள பாலைவனப் பகுதியில், Gautameshwar கோவில் இருக்கின்றது. இங்கு வரும் திருப்பயணிகள், தங்களது உடலும் ஆன்மாவும் தூய்மையடைவதற்காக அங்கிருக்கும் Mandakini Kund என்ற தண்ணீர்த் தடாகத்தில் நீராடுகிறார்கள். அத்துடன், தாங்கள் தூய்மையடைந்ததற்கானச் சான்றிதழையும் பெற்றுச் செல்கிறார்கள். இது குறித்துப் பேசிய ஆலயக் குரு Jagdish Sharma, “புனித நீர்களில் கழுவினால் தங்கள் பாவங்கள் கழுவப்படும் என்ற நம்பிக்கையில் அனைத்து இந்து மதத்தினரும் ஹரித்வார்(Haridwar) புஷ்கார் (Pushkar) போன்ற இடங்களுக்குத் திருப்பயணம் செல்கின்றனர், ஆனால் தாங்கள் தூய்மையடைந்ததை மெய்ப்பித்துக் காட்டுவதற்கு Gautameshwar கோவில் முக்கியமானது” என்று கூறியுள்ளார். இந்த இடம் அப்பகுதி பழங்குடி இனச் சமூகங்களை ஒன்றிணைக்கும் புனித இடமாகவும் இருக்கின்றது. தங்கள் சொந்தக் கிராமங்களிலிருந்து விலக்கி வைக்கப்பட்ட மக்கள் இங்கு வந்து புனித நீராடி, தங்களது பாவத்தினின்று விடுதலை அடைந்ததை உறுதிசெய்யும் சான்றிதழையும் தங்களோடு எடுத்துச் செல்கின்றனர்.
புனித இடங்களில் செபங்களில் கலந்து கொண்டது அல்லது புனித நீரில் மூழ்கியது போன்றதற்கானச் சான்றிதழ்கள் மற்ற இடங்களில் கொடுக்கப்படுகின்றன. ஆனால் Gautameshwarல் இடம்பெறுவது சாதாரணப் பழக்கத்திலிருந்து வேறுபட்டுத் தெரிகிறது. இந்தப் பழக்கம் குறித்து மேலும் விளக்கிய ஆலயக் குரு Jagdish Sharma, “இது Gautameshwarல் நூற்றாண்டுகளாக இடம்பெற்று வருகின்றது. ஆயிரக்கணக்காண பக்தர்கள் இங்கு வந்து செபம் செய்து தங்கள் பாவத்தினின்று விடுதலை அடைந்து செல்கின்றனர். இந்தக் கோவிலில் பணி செய்யும் ஆறு குருக்கள் தாங்கள் வழங்கியுள்ள அனைத்துச் சான்றிதழ்களுக்கும் 1947ம் ஆண்டிலிருந்து பதிவேடுகளை வைத்திருக்கின்றனர்” என்று கூறியுள்ளார். Aravaliமலைப் பகுதிக்கு அருகிலுள்ள Malwa மேட்டுநிலத்தில் அமைந்துள்ள இந்தக் கோவில் "பழங்குடி இன மக்களின் ஹரித்வார்" என அழைக்கப்படுகின்றது. இந்தப் பழங்குடி மக்கள் 15 ரூபாய் கொடுத்து இந்தச் சான்றிதழை வாங்கி, தங்கள் இனத்தலைவரிடம் கொடுத்துவிட்டு சமூகத்தோடு ஒன்றிணைந்து விடுகிறார்கள். அன்பர்களே, ஒரு பசுவைத் திருடியது அல்லது வேறு வகையான குற்றங்களுக்குப் பிராயச்சித்தமாக இந்த மக்கள் மத்தியில் இந்தப் பழக்கம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நிலவிவருகிறது. இது குறித்த விவாதங்களை நடத்த விரும்பவில்லை. அது அவரவர் மத நம்பிக்கை. ஆயினும் இந்தப் பழக்கம் குறித்த கருத்துக்களை நேயர்கள் எமக்கு எழுதலாம். இந்தச் செய்தியை வாசித்த போது ஓர் எழுத்தாளர் சொல்லியுள்ள ஒரு கூற்று நமக்கு நினைவுக்கு வருகிறது. அதாவது....
“சிலவகை பழக்கவழக்கங்கள் மறுபரிசீலனைக்குரியவை. மாற்றப்பட வேண்டியவை. ஆனால் அவை உடனடியாக மாற்ற முடியாமல் போய்விடும். காரணம் பழக்கங்கள் பலமானவை”
“சிலவகை பழக்கவழக்கங்கள் மறுபரிசீலனைக்குரியவை. மாற்றப்பட வேண்டியவை. ஆனால் அவை உடனடியாக மாற்ற முடியாமல் போய்விடும். காரணம் பழக்கங்கள் பலமானவை”. அன்பர்களே, பாகிஸ்தானின் மீனவர்கள் வலையில் கடந்த வார இறுதியில் சிக்கிய 12 அடி நீள, மூவாயிரம் கிலோ எடை கொண்ட இராட்சத திமிங்கிலத்தைவிடப் பெரியது என்று சொல்லலாம் மனிதரைக் கவ்விப் பிடித்திருக்கும் பல பழக்கங்களை. ஒருவர் காயம்பட்ட தனது நண்பரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அவரைப் பார்த்ததும் மருத்துவர், இவருக்கு எப்படி இவ்வளவு அடிபட்டுச்சு? என்று கேட்டார். அதற்கு அந்த நண்பர், படம் பார்த்துக்கிட்டு இருக்கும்போது பழக்கதோஷத்துல எந்திரிச்சு வெளியே போயிட்டார் டாக்டர் என்றார். மருத்துவர் மீண்டும், அதனால இப்படி அடிபடுமா? என்று கேட்க, இல்லை டாக்டர், இவர் படம் பார்த்தது விமானத்துல ஆச்சே! என்றாராம். பழக்கதோஷத்தைப் பற்றிப் பலரும் பலவிதமாகச் சொல்வார்கள். தினமும் ஒரே பேருந்து தடத்தில் அலுவலகம் போய் வந்து கொண்டிருந்த ஒருவர், ஒருநாள் அவசரமாக வேறு ஓர் அலுவலகத்துப் போக வேண்டியிருந்தது. பழக்கதோஷம், அதே வழக்கமான பேருந்தில் ஏறி அன்று அவசரமாக முடிக்க வேண்டிய காரியத்தைத் தாமதப்படுத்திவிட்டார். வீ.முனிசாமி என்ற புகழ்பெற்ற நகைச்சுவைப் பேச்சாளர் சொன்ன நகைச் சுவைகளில் ஒன்றைக் கேளுங்கள்.
ஒரு மகன், தனது தந்தையிடம் மதிப்பெண் அட்டையைக் கொண்டுவந்து கொடுத்து அதில் கையெழுத்துப் போட்டுத் தருமாறு கேட்டான். அப்போது தந்தை மகனைக் குனியச் சொல்லி அவனது முதுகின்மீது அந்த மதிப்பெண் அட்டையை வைத்துக் கையெழுத்துப் போடப்போனார். அப்போது மகன் முதுகை அசைக்காமல் அப்படியே இருந்தான். அதற்கு அந்தத் தந்தை, ஏன்டா, முதுகை ஆட்டாம இருக்கிறா, கொஞ்சம் ஆட்டேன்டா என்றார். ஆட்டாமல் இருந்தால்தானே ஒழுங்காகக் கையெழுத்துப் போட முடியும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அந்தத் தந்தை சொன்னது கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில் அவர் மாநகரப் பேருந்தில் கன்டக்டர் வேலை செய்கிறார். இங்குமங்கும் ஆடிக்கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகளுக்குப் பயணச்சீட்டுகளை எழுதிக் கொடுத்துப் பழக்கப்பட்டவர்.
அன்பு நேயர்களே, ஏன் நாம்கூட இந்தக் கன்டக்டர் தந்தை போல, பல நேரங்களில் பழக்கதோஷத்தில் பல காரியங்களைச் செய்கிறோம். மும்பையில், திருமண மண்டபங்களில், மணமக்கள் வீட்டார் போல புகுந்து திருடுவது எப்படி என, ஆறு வயது மகனுக்கு கற்று கொடுத்த பெற்றோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் என, கடந்த வாரத்தில் செய்தி ஒன்று வெளியாகி இருந்தது. ஆயினும், பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு பல நல்ல பழக்கங்களை ஊட்டி வளர்க்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் Mohammed bin Zayed Al Nahyan பற்றிய ஓர் ஒளிப்படம் சென்ற வார இறுதியில் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த இளவரசர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒரு சிறுமி தனியாக நின்றுகொண்டிருப்பதைக் கண்டு, வாகனத்தை நிறுத்திவிட்டு, அச்சிறுமியிடம் பேச்சுக் கொடுத்தார். தனது தந்தைக்காகக் காத்துக்கொண்டிருப்பதாக அச்சிறுமி சொன்னதும், அப்படியானால் நான் கொண்டுபோய் வீட்டில் விடுகிறேன் என இளவரசர் கேட்டதற்கு, அச்சிறுமி மறுப்புத் தெரிவித்துள்ளார். அங்கு இருப்பவர் முடிக்குரிய இளவரசர் என அவரின் உதவியாளர் சிறுமியிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அச்சிறுமி, வந்திருப்பவர் மன்னர் எனத் தனக்குத் தெரியும். ஆனால் முன்பின் தெரியாத நபர்களுடன் செல்லவேண்டாம் என, தனக்குத் தந்தை அறிவுறுத்தியுள்ளதாகப் பதில் சொல்லியுள்ளார் அச்சிறுமி. இளவரசரும் அச்சிறுமியின் தந்தை வரும்வரை அவருடனே வீதியில் காத்திருந்துள்ளார்.
இவ்வாறு தங்கள் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோரும் உள்ளனர். இத்தனை மணிக்குத் தூங்கச் செல்ல வேண்டும், இந்த நேரம் செபிக்க வேண்டும், இவ்வளவு நேரம் படிக்க வேண்டும், இவ்வளவு நேரம் விளையாட வேண்டும், பெரியோரை மதித்து நடக்க வேண்டும் என்ற பல நல்ல பழக்கவழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கின்றனர். நெற்றியில் சிலுவை அடையாளம் வரைவது, சந்தியா வந்தனம் செய்வது, நேரம் தவறாமல் தொழுகை செய்வது, எல்லா நேரங்களிலும், சிறப்பாக ஆபத்தான, கவலையான நேரங்களில் கடவுள் பெயரை உச்சரிப்பது, மனஅமைதி பெற தியானம் செய்வது எனப் பல பல நல்ல பழக்கவழக்கங்களை குடும்பங்களும் மதங்களும் சொல்லிக் கொடுக்கின்றன. அதேசமயம், மதத்தின் பெயரால் வன்முறைகளைக் கையில் எடுப்பதற்குச் சொல்லிக்கொடுக்கப்படும் பழக்கங்கள் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாதவை. எந்தவிதத்திலும் நியாயம் கற்பிக்கப்பட முடியாதவை. அப்பாவிகளின் உயிர்களைக் காவுகொள்ளும், அப்பாவிகளைத் தேவையற்றத் துன்பத்துக்கு உள்ளாக்கும் மதங்களின் செயல்கள் உண்மையாகவே கண்டிக்கப்பட வேண்டியவை. எல்லா மதங்களின் போதனையும் அன்புதான். உயிர்வதைகளை எந்த மதமும் அங்கீகரிப்பதில்லை.
இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், “அன்பும் உண்மையும் கடவுளின் இரண்டு பெயர்கள். அன்பு பொறுமையுள்ளது, நன்மை செய்யும்: பொறாமைப்படாது, இறுமாப்பு அடையாது. இழிவானதைச் செய்யாது. தன்னலம் நாடாது, தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது” என்ற புனித பவுலின் சொற்களையும் குறிப்பிட் RealAudioMP3 டார். எனவே அன்புக்கு அடித்தளமிடும் பழக்கங்களை நாமும் ஊக்குவிப்போம். மாற்றவேண்டிய பழக்கங்களை மாற்றி, நல்ல பழக்கங்களில் வளருவோம். மாற்றங்களை மறுதலிக்கிறவர்கள் தோற்றுப்போகிறார்கள். மாற்றங்களை எதிர்பார்த்து முன்கூட்டியே தயாராக இருப்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.







All the contents on this site are copyrighted ©.