2013-02-04 16:18:09

திருத்தந்தையின் பிப்ரவரி மாதச் செபக் கருத்துக்கள்


பிப்ரவரி 2013 பொதுக் கருத்து : குடியேற்றதாரக் குடும்பங்கள், சிறப்பாக, தாய்மார்கள் கஷ்டமான சூழல்களிலிருந்து வெளிவருவதற்கு அவர்களுக்கு உதவிகள் கிடைக்கும்படியாக..
மறைபோதகக் கருத்து : போர்ப் பகுதிகள் அல்லது ஆயுதம் தாங்கிய மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் அமைதியின் தூதுவர்களாக மாறுவதற்கு அவர்களுக்கு உதவிகள் கிடைக்கும்படியாக..
இந்த பிப்ரவரி மாதத்தில் நாம் அனைவரும் இக்கருத்துகளுக்காகச் சிறப்பாகச் செபிக்க வேண்டுமென்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுள்ளார்
வத்திக்கான் வானொலி நேயர் குடும்பத்தைச் சார்ந்த குடியேற்றதாரக் குடும்பங்கள், உள்நாட்டு மோதல்கள், வறுமை காரணமாக வேறு நாடுகளில் பிழைப்பு தேடிக் குடியேறியிருப்பவர்கள், சிறப்பாக, தங்களது கணவன், பிள்ளைகளைச் சொந்த ஊர்களில் விட்டுவிட்டு, வெளிநாடுகளில் வீட்டுவேலைகள் செய்யும் தாய்மார்களுக்காகச் செபிப்போம். இவர்கள் வீட்டுவேலைசெய்யும் குடும்பங்களில் பலவகையான, வெளிப்படையாகச் சொல்ல முடியாத துன்பங்களை எதிர்கொள்கிறார்கள். ஓய்வின்றி வேலை, தனிமை உட்பட பல கஷ்டங்கள். அண்மையில் சவுதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த ரிசானா நஃபீக் என்ற இளம்பெண் பொது இடத்தில் வைத்து தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது உலகம் அறிந்த செய்தி.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேற்றதாரர்களின் துன்பகரமான நிலை குறித்து அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் அடிக்கடி அரசுக்கு நினைவுபடுத்தி வருகின்றனர். அதேபோல் பிற அமெரிக்க நாடுகளின் ஆயர்களும் தங்கள் நாடுகளிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேறும் மக்களுக்காக அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார்கள். எல்லைப்புறங்களில் அவர்கள் போதைப்பொருள் வியாபாரிகளால் எதிர்நோக்கும் இடர்களையும் சுட்டிக் காட்டி வருகிறார்கள். அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் பராக் ஒபாமாவும், சில செனட்டர்களும் குடியேற்றதாரர் குறித்து முன்வைத்துள்ள பரிந்துரைகள் கவலை தருவதாக இருப்பதாக, குடியேற்றதாரர் உரிமைகளுக்காக உழைக்கும் San Diego வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார். Las Vegasல் ஒபாமா உரையாற்றியபோது, அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியுரிமை பெறாமல் வாழும் ஏறக்குறைய ஒரு கோடியே 10 இலட்சம் மக்கள் குடியுரிமை பெறுவதற்கான நடவடிக்கையில் உள்ளனர். அதோடு, அமெரிக்க ஐக்கிய நாட்டின் எல்லைகள் நன்றாகக் கட்டுப்படுத்தப்படும். மேலும், இங்கு வேலை செய்ய ஆள்களை எடுப்பவர்கள், பணியாளர்களின் வேலை செய்வதற்கான உரிமையை ஆய்வு செய்வார்கள் என்று தெரிவித்தார். ஆனால், ஒபாமாவின் குடியேற்றதாரர் குறித்த சீர்திருத்த திட்டத்திற்கு அந்நாட்டில் எதிர்ப்புக்களும் கிளம்பியுள்ளன. அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஏறத்தாழ 3 கோடியே 80 இலட்சம் பேர் குடியேற்றதாரர்கள். இவர்கள் அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 12.5 விழுக்காட்டினர். இவர்களில் 1 கோடியே 20 இலட்சம் பேர்வரை சரியான அங்கீகாரமின்றி வாழ்கின்றனர் என்று சொல்லப்படுகின்றது. இந்நாட்டில் குடியேறுகிறவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் இலத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இன்று உலகில் 19 கோடிக்கு மேற்பட்ட மக்கள் தங்கள் நாடுகளைவிட்டு வெளிநாடுகளில் வாழ்கின்றனர். தங்கள் குழந்தைகளையும் குடும்பத்தையும் பாதுகாப்பதற்குத் தாய்மார் எதிர்கொள்ளும் துன்பங்கள் சொல்லும் தரமன்று. எனவே இம்மாதத்தில் குடியேற்றதாரத் தாய்மார்களுக்காகச் செபிப்போம்.
இந்த மாதம் 22ம் தேதி இலங்கையின் நமது அபிமான அன்புள்ளம் திருமதி மார்ட்டின் டி போறஸ் இறந்த மூன்றாமாண்டு நினைவு தினம். எனவே இந்தத் தாயின் ஆன்மா நிறைசாந்தியடையச் செபிப்போம். அவரது கணவர் திருவாளர் மார்ட்டின் டி போறஸ், மகன் மற்றும் உடன்பிறந்த தங்கை அருள்சகோதரி இதயமலர் ஆகியோரின் கருத்துக்களுக்காவும் இவ்வேளையில் நாம் அனைவரும் சிறப்பாகச் செபிப்போம். மேலும், கோவை, வி.ஜெ.ஜோபி லாசரின் தாத்தா T.D. இரபேல் அவர்களின் 17ம் ஆண்டு இறந்த நாளை கடந்த மாதம் 27ம் தேதியன்று ஜோபி லாசரின் குடும்பத்தார் நிணைவுக்கூர்ந்து செபித்துள்ளார்கள். இரபேல் அவர்களின் ஆன்மா சாந்தியடைய வானொலிக் குடும்பங்கள் ஜெபிக்குமாறுக் கேட்டுள்ளார். செபிப்போமா.....
எம் தாயும் தந்தையுமான பரம்பொருளே இறைவா, நீர் அநாதைகளுக்குத் தஞ்சம். நோயாளிகளின் மருத்துவர். வீடற்றவர்களுக்குப் புகலிடம். பசியால் வாடுவோருக்குப் பசிதீர்க்கும் உணவு. இறைவா, உம் பிள்ளைகளின் கவலைகளையும் கஷ்டங்களையும் போக்கியருளும். போர் இடம்பெறும் சூழல்களிலும், ஆயுதத் தாக்குதல்கள் இடம்பெற்றுவரும் இடங்களிலும் வாழும் மக்களை இவ்வேளையில் நினைக்கின்றோம். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பசியாலும் நோயாலும் தினம் தினம் செத்து வாழும் மக்களை நினைவுகூரும். சிரியாவில், மாலி நாட்டில் ஆயுதத் தாக்குதல்களால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். எம் நல்ல தந்தையே, இவர்கள் தங்களின் கசப்பான அனுபவங்களிலிருந்து அமைதியின் மேன்மையை உணரச் செய்யும். இவர்களை அமைதியின் தூதுவர்களாக மாற்றும்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் அரசுத்தலைவர் ஜான் கென்னடி துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்ததன் 50ம் ஆண்டு நினைவு இந்த 2013ம் ஆண்டில் கடைப்பிடிக்கப்படவிருக்கின்றது. ஆயினும் அந்நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரம் இன்னும் ஒழிக்கப்படவில்லை. துப்பாக்கிக் கலாச்சாரம் உள்ள ஒரு நாட்டில் எவ்வாறு வாழ்வுக் கலாச்சாரத்தைக் கொண்டு வருவது என்று கேள்வி கேட்கின்றனர். ஆப்கானிஸ்தானில் 11 ஆண்டுகளாகப் போரிட்டுவரும் அமெரிக்கப் படைவீரர்களில் சுமார் 2,000 பேர் இறந்துள்ளனர். அமெரிக்காவின் முன்னாள் இராணுவப் படைவீரர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 22 பேர் தற்கொலை செய்துகொள்வதாக அமெரிக்காவின் முக்கிய அரசு ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. ஈராக்கில் 2012ம் ஆண்டின் இறுதி நாளைய நிலவரத்தின்படி, ஈராக்கில் 4,487 அமெரிக்கப் படைவீரர்கள் இறந்துள்ளனர். 32,223 அமெரிக்கப் படைவீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதுதான் ஆயுதம் ஏந்திய மோதல்களின் விளைவு.
1960களில் சிகரெட்டுகள் பெருமளவில் விளம்பரப்படுத்தப்பட்டு ஊக்குவிக்கப்பபட்டன. ஆயுதக் கொலைகளைவிட சிகரெட் புகைக் கொலைகள் அதிகம். சிகரெட் பிடிப்பவர் மட்டுமல்லாமல் அருகில் இருப்பவரும் குழந்தைகளும் மிகுந்த அளவில் பாதிக்கப்படுகின்றனர். சிரியா நாட்டைப் பற்றிப் பேசும் அதிகாரிகள், அங்கு இடம்பெறும் வன்முறைகள் சொல்லமுடியாத அளவுக்கு கொடூரங்களை விட்டுச் செல்கின்றன எனக் கூறுகின்றனர். சிரியாவின் வடபகுதி நகரமான அலெப்போவில், ஒன்றாகக் கொல்லப்பட்ட 70க்கும் மேற்பட்ட இளையோரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்குத் தாங்கள் பொறுப்பில்லை என சிரியா இராணுவம் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் சொல்லியுள்ளது. சிரியாவில் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர் என்று ஐ.நா. கூறியுள்ளது.
எகிப்தில் பரவலாக இடம்பெறும் அரசியல் பதட்டநிலை அந்நாட்டின் வீழ்ச்சியின் விளிம்புக்கு இட்டுச் செல்கின்றது.. கடந்த வாரத்தில்கூட 52 பேர் கொல்லப்பட்டனர். காஷ்மீரில் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் பதட்டநிலைகள் உருவாகியுள்ளன. சாதி, இன, வகுப்புவாதச் சண்டைகளிலும் ஆயுதங்கள் எளிதாகப் பயன்படுத்தப்படுகின்றன. குடும்பச் சண்டைகளில் சுடும் வார்த்தைகள் ஆயுதங்களாக உறவுகளை வெட்டி எறிகின்றன.

எனவே அன்புள்ளங்களே, உலகில் போர்கள் நீங்கி அமைதி நிலவச் செபிப்போம். உலகில் ஆயுதங்கள் களையப்படட்டும். அணுஉலைகள் மூடப்படட்டும். மக்கள் மத்தியில் சண்டைகள் நீங்கி அமைதி ஏற்படட்டும். பிப்ரவரி 4, ஓரியூர் புனித அருளானந்தரின் திருவிழா. தமிழக மண்ணில் குருதி சிந்திய இப்புனிதரிடம் சிறப்பாக வேண்டுவோம். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும், பிணக்குகள் நீங்கி சமாதானம் ஏற்படவும் செபிப்போம்.







All the contents on this site are copyrighted ©.