2013-02-02 15:54:21

உலகில் புற்றுநோய் எந்த இடத்திலும் மரணதண்டனையாக அமைந்துவிடக்கூடாது, WHO வலியுறுத்தல்


பிப்.02,2013. புற்றுநோய்களில் பலவகைகளைக் குணப்படுத்தவும், அவற்றைத் தடுத்து நிறுத்தவும் வழிகள் இருக்கும்வேளை, புற்றுநோய், உலகில் எந்த இடத்திலும் மரணதண்டனையாக அமைந்துவிடக்கூடாது என்று, WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டார்.
பிப்ரவரி 4ம் தேதியன்று அனைத்துலக புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு இவ்வாறு கேட்டுள்ள, WHO நிறுவனத்தின் தொற்றாத நோய்கள் மற்றும் மனநலப் பிரிவின் உதவி இயக்குனர் Oleg Chestnov, புற்றுநோயைக் கட்டுப்படுத்தவும், அவற்றுக்கான நீண்டகாலச் சிகிச்சை வழங்கவும், உலகில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் திணறுகின்றன என்று கூறினார்.
தொற்றாத நோய்கள் குறித்த நாடுகளின் தேசியத் திட்டங்கள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுவத்துவதற்கான நாடுகளின் திறமைகள் குறித்து WHO நிறுவனம் 185 நாடுகளில் நடத்திய ஆய்வில், புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும், அவற்றுக்குச் சிகிச்சை வழங்குவதற்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பது தெரிய வந்துள்ளதாக Chestnov கூறினார்.
உலகில் இடம்பெறும் இறப்புக்களுக்கு முக்கிய காரணம் புற்றுநோய் எனவும், 2008ம் ஆண்டில் இந்நோயால் 76 இலட்சம் பேர் இறந்துள்ளனர் என்றும் WHO நிறுவனம் கூறியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.