2013-02-02 15:55:54

உலகின் பொதுவான இலக்குகளை அடைவதற்கு அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து உழைக்குமாறு ஐ.நா. பொதுச் செயலர் அழைப்பு


பிப்.02,2013. அமைதி, வளமை, உடல்-உள்ள நலவாழ்வு ஆகிய பொதுவான இலக்குகளை உலகினர் அடைவதற்கு அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து உழைக்குமாறு கேட்டுள்ளார் ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன்.
ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி முதல் வாரத்தில் கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக பல்சமய நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு இவ்வாறு கேட்டுக்கொண்டார் பான் கி மூன்.
குழப்பங்கள் நிறைந்த இன்றைய உலகில், அமைதி, வளமை, உடல்-உள்ள நலவாழ்வு ஆகியவற்றை அனைவரும் பெறுவதற்கான ஐ.நா.வின் முயற்சிக்கு அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து உதவினால், இம்முயற்சி இலகுவாகும் என்றும் அவர் கூறினார்.
அனைத்து மதத்தினர் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில், அனைத்துலக பல்சமய நல்லிணக்க வாரத்தை 2010ம் ஆண்டில் ஏற்படுத்தியது ஐ.நா.பொது அவை.
உலகின் அனைத்து ஆலயங்கள், மசூதிகள், தொழுகைக்கூடங்கள், கோவில்கள் மற்றும் பிற வழிபாட்டு இடங்களில் பல்சமய நல்லிணக்கம் மற்றும் நன்மனச் செய்திகள், பிப்ரவ்ரி முதல் வாரத்தில் பரப்பப்பட வேண்டுமென ஐ.நா.பொது அவை அனைத்து மதத்தினரையும் ஊக்கப்படுத்துகிறது.







All the contents on this site are copyrighted ©.