2013-02-01 15:42:32

"கிளைவிட்டுவரும் இளையோர்க் கலாச்சாரங்கள்" : திருப்பீடக் கலாச்சார அவையின் ஆண்டுக் கூட்டம்


பிப்.01,2013. "வளர்ந்துவரும் இளையோர்க் கலாச்சாரங்கள்" என்ற தலைப்பில் திருப்பீடக் கலாச்சார அவையின் ஆண்டுக் கூட்டம் இம்மாதம் 6 முதல் 9 வரை வத்திக்கானில் நடைபெறும் என, அவ்வவையின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi தெரிவித்தார்.
இக்கூட்டம் குறித்து அசிசியில் நிருபர் கூட்டத்தில் விளக்கிய கர்தினால் Ravasi, காதுகளில் ஒலிவாங்கிகளை வைத்துக் கொண்டு, பாடல்களைக் கேட்டுக்கொண்டு சாலைகளில் நடந்து செல்லும் இளையோர்களைப் பார்க்கும்போது, அது, வயது வந்தோரால் உருவாக்கப்பட்ட தாங்கமுடியாத சமூக, அரசியல் மற்றும் சமயக் குழப்பங்களிலிருந்து அவர்கள் தங்களைத் துண்டித்துக்கொண்டுவிட்டதன் அடையாளமாக இருக்கின்றது என்று கூறினார்.
ஊழல், கொள்கை மாறாட்டம், நிலையற்றதன்மை, வேலைவாய்ப்பின்மை, ஓரங்கட்டுதல் போன்ற தங்களது செயல்களால் வயது வந்தோர், இளையோரை ஒதுக்கிவைப்பதால், அவர்களும் ஒதுங்கிக் கொள்கின்றனர் என்றும் கர்தினால் Ravasi கூறினார்.
வளரும் நாடுகளில் வாழும் 500 கோடி மக்களுள் பாதிக்கும் மேற்பட்டோர் 25 வயதுக்கும் உட்பட்டவர்கள், அதாவது உலகிலுள்ள அனைத்து இளையோரிலும் வளரும் நாடுகளின் இளையோர் 85 விழுக்காட்டினர் எனவும் பேசிய கர்தினால் Ravasi, திருப்பீடக் கலாச்சார அவை இளையோர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.