2013-01-31 15:47:44

மகா கும்ப மேளாவையொட்டி கத்தோலிக்கக் குழு நடத்தும் வீதி நாடகங்கள்


சன.31,2013. இந்தியாவின் அலகாபாத் நகரில் தற்போது நடைபெற்று வரும் மகா கும்ப மேளாவையொட்டி, மத நல்லிணக்கத்தையும், மனித நேயத்தையும் வலியுறுத்தும் வீதி நாடகங்களை கத்தோலிக்கக் குழு ஒன்று நடத்தி வருகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாபெரும் இந்து மதப் புனித விழா, சனவரி 14ம் தேதி முதல், பிப்ரவரி 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, இந்திய மறைப்பணித் துறவுச் சபை என்ற அமைப்பினரால் பல்வேறு வீதி நாடகங்கள் நடைபெற்று வருகின்றன.
HIV-AIDS நோய் பற்றிய விழிப்புணர்வையும், இந்நோய் கண்டவர்களை மனித சமுதாயம் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தும் நாடகங்கள் சனவரி 26, 27, 28 ஆகிய நாட்களில் நடைபெற்றன.
கங்கை நதியில் ஏற்படும் அளவுக்கு மீறிய மாசுகள் பற்றியும், சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றியும் விழிப்புணர்வை உருவாக்கும் நாடகங்களை இந்திய மறைப்பணித் துறவுச் சபையின் Vishwa Jyoti என்ற குழுவினர் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
மனிதர்கள் கூடிவரும் எண்ணிக்கையில் உலகச் சாதனை படைக்கும் கும்ப மேளா நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சாதுக்களில் பலர், கங்கை மாசுபட்டு வருவதை கண்டித்து, இவ்வாண்டு கங்கையில் குளிக்கப்போவதில்லை என்ற தீர்மானம் எடுத்திருப்பதாக UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.