2013-01-31 15:40:45

கற்றனைத்தூறும்..... தேநீர்


உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் விரும்பி அருந்தப்படும் ஒரு பானம் தேநீர். இது, கமெலியா சினென்சிஸ்(Camellia sinensis) எனப்படும் தாவரஇனச் செடியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. பொதுவாக, பச்சைத் தேநீர், ஊலூங் தேநீர், கருப்புத் தேநீர், வெண்மைத் தேநீர், புவார்த் தேநீர் என ஐந்து வகையான தேநீர்கள் உள்ளன. இவை எல்லாமே ஓரே செடியைச் சேர்ந்தவை என்றாலும், அந்தச் செடியிலிருந்து குருத்து இலைகளைப் பறித்த பின்னர் அவற்றைப் பதப்படுத்தும் முறைகளில் இவை மாறுபடுகின்றன. தேநீர் வரலாற்றோடு தொடர்புடைய புகழ்பெற்ற சீனக் கதை ஒன்று உள்ளது. இது கி.மு. 2,737ல் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. வேளாண்மையையும், சீன மருத்துவ முறையையும் கண்டுபிடித்ததாகச் சொல்லப்படும் Shandong என்னும் சீனப் பேரரசர், ஒரு நாள் வெந்நீர் குடித்துக்கொண்டு இருந்தபோது, காற்று வீச, அருகிலிருந்த ஒரு மரத்திலிருந்து சில இலைகள் அவர் அருந்திக்கொண்டிருந்த வெந்நீரில் விழுந்தனவாம். அப்போது நீரின் நிறம் மாறுவதை அவர் கவனித்தார். புதிய விடயங்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டிருந்த பேரரசர் Shandong, அந்த நீரில் ஒரு முடக்கு அருந்தி அதன் வாசனையையும், உற்சாகம் தரும் இயல்பையும் அறிந்து வியந்தாராம். தென்மேற்கு சீனா, வடகிழக்கு இந்தியா, வடக்கு பர்மா, திபெத்து ஆகிய பகுதிகளிலேயே முதலில் தேயிலை பயிரிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. 16ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்கள் தேயிலையை ஐரோப்பாவுக்கு எடுத்துச் சென்றனர். அச்சமயம் தேநீர், Chá என்ற பெயரில் புழக்கத்திலிருந்தது. வட அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள 9 தீவுகளைக் கொண்ட போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த Azoresல், மல்லிகையுடன் சேர்த்து தேயிலையைப் பயிரிடுவதற்காக 1750ம் ஆண்டில் சீனாவிலிருந்து தேயிலை வல்லுனர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இவ்வாறு போர்த்துக்கல் நாட்டில் தேநீர் அருந்தும் பழக்கம் ஏற்பட்டது. அரசர் 2ம் சார்லசின் மனைவி Braganzaவின் கத்ரீன், இந்தப் பழக்கத்தை 1660ம் ஆண்டுவாக்கில் பிரிட்டனில் அறிமுகப்படுத்தினார். எனினும் 19ம் நூற்றாண்டுவரை பிரிட்டனில் தேநீர் அருந்தும் பழக்கம் பிரபலமடையவில்லை. அயர்லாந்தில் 19ம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில்தான் இப்பழக்கம் வந்தது. உலகில் அதிகமாகத் தேநீர் அருந்தும் நாடான இந்தியா தவிர, சீனா, கென்யா, இலங்கை துருக்கி ஆகிய நாடுகளே உலகில் அதிகமாகத் தேயிலையை உற்பத்தி செய்கின்றன. 2010ம் ஆண்டில் உலகில் 45 இலட்சத்து 20 ஆயிரம் டன்களுக்கு மேலாக, தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது. உலகில் அதிகமாகத் தேயிலையை இறக்குமதி செய்யும் நாடு இரஷ்யா.
ஜப்பான், கொரியா, தாய்வான் ஆகிய நாடுகளில் மிகவும் பயன்படுத்தப்பட்ட ஒரு மரபு சடங்காகவும், கலையாகவும் தேநீர்ச் சடங்கு (Tea Ceremony) உள்ளது. தேநீர் சடங்கு நடத்துனர், அந்தந்த மரபுகளுக்கேற்ப, தேநீரைத் தயாரித்து விருந்துனருடன் பகிர்வதே இச்சடங்கின் சாரம்சம். கறுப்புத் தேநீர் வகை பெரும்பாலும் இலங்கையில் தயாரிக்கப்படுகிறது.









All the contents on this site are copyrighted ©.