2013-01-31 15:47:11

'இளையோருக்கு நீதியான தண்டனைகள் வழங்குதல்' - அமெரிக்க ஆயர்களின் முயற்சி


சன.31,2013. 18 வயதுக்கு உட்பட்ட இளையோருக்கு, விடுவிக்கபடமுடியாத ஆயுள் தண்டனை வழங்குவது, அவர்களுக்கு அனைத்து வாய்ப்புக்களையும் மறுத்துவிடுகிறது என்று அமெரிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
'இளையோருக்கு நீதியான தண்டனைகள் வழங்குதல்' என்ற கருத்துடன் அமெரிக்க ஆயர் பேரவையின் உள்நாட்டு நீதி மற்றும் மனிதவள மேம்பாடு என்ற பணிக்குழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இம்முயற்சிகளுக்கு, 100க்கும் மேற்பட்ட பல்வேறு மத அமைப்புக்களும், சமுதாய அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இளையோரில் பலர், மிகுந்த வன்முறைகளை வெளிப்படுத்தி சமுதாயத்திற்கு ஆபத்தாக இருக்கின்றனர் என்றாலும், அவர்களை வயது வந்தவர்களோடு ஒன்றாகக் கருதி, அவர்களுக்கு வழங்கப்படும் அதே தண்டனையை வழங்குவது சரியல்ல என்று ஆயர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
18 வயதுக்கு உட்பட்டவர்கள் வெளியேற முடியாத ஆயுள் தண்டனை, அமெரிக்காவில் 38 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. அந்நாட்டில் தற்போது 18 வயதுக்கு உட்பட்ட ஆயுள்தண்டனைக் கைதிகள் 2500க்கும் அதிகமானோர் என்றும், இவர்களில் பெரும்பான்மையானவர்கள் கருப்பினத்தைச் சார்ந்தவர்களே என்றும் ICN என்ற கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.