2013-01-30 15:57:57

பிலிப்பின்ஸ் அரசு வாரிசு அரசியலை உடனடியாக நிறுத்தவேண்டும் - பிலிப்பின்ஸ் ஆயர்கள் பேரவை


சன.30,2013. வாரிசு அரசியலையும், வளர்ந்துவரும் ஊழலையும் பிலிப்பின்ஸ் அரசு உடனடியாக நிறுத்தவேண்டும் என்று பிலிப்பின்ஸ் ஆயர்கள் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக பிலிப்பின்ஸ் நாட்டின் மணிலா நகரில் பிலிப்பின்ஸ் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் ஆண்டு நிறைவு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் இறுதியில், மேய்ப்புப்பணி மடல் ஒன்றை, ஆயர்கள் சார்பில் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Jose Palma இச்செவ்வாயன்று வெளியிட்டார்.
மக்களின் கவலைகளை வெளியிடவும், அவர்களோடு இணைந்து நன்னெறியை உறுதிப்படுத்தும் போராட்டத்தில் துணை நிற்கவும் ஆயர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்று பேராயர் Palma செய்தியாளர்களிடம் கூறினார்.
வாரிசு அரசியலைத் தடை செய்யும் வகையில் சட்டமொன்றை உருவாக்க, பிலிப்பின்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காட்டும் தயக்கம் வருத்தத்தைத் தருகிறது என்றும், இவ்வகை சட்டம் இயற்றப்படுவதற்கு திருஅவை முழுமையான ஆதரவு அளிக்கும் என்றும் பேராயர் Palma கூறினார்.
மக்கள் நலனில் அக்கறை கொண்டு, ஊழலற்ற வகையில் அரசாளும் தகுதி பெற்றோரையே நடைபெறவிருக்கும் தேர்தல்களில் மக்கள் தெரிவு செய்யவேண்டும் என்றும் பிலிப்பின்ஸ் ஆயர்களின் மேய்ப்புப்பணி மடல் அழைப்பு விடுக்கிறது.








All the contents on this site are copyrighted ©.