2013-01-29 15:31:01

விவிலியத்
தேடல் – உவமைகள்: ஓர் அறிமுகம் – பகுதி 4


RealAudioMP3 கதைகளோடு தொடர்புடைய மூன்று எண்ணங்களை முதலில் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். குழந்தைகளும் கதைகளும், ஊடகத் துறையில் கதைகளின் முக்கியத்துவம், கதைகளுக்கு உள்ள குணப்படுத்தும் ஆற்றல் என்பன இம்மூன்று எண்ணங்கள்...

குழந்தைகளுக்குக் கதை சொல்லிய அனுபவம் உங்களுக்குண்டா? நான் குழந்தைகளுக்கு அதிகம் கதை சொல்லியதில்லை என்றாலும், அவர்களுக்கு மற்றவர் கதை சொல்வதைக் கூர்ந்து கவனித்திருக்கிறேன். கதை என்று சொன்னதும் அக்குழந்தைகள் மத்தியில் தோன்றும் ஆர்வம், கதையைக் கேட்கும் நேரத்தில் அதில் முற்றிலும் ஆழந்துவிடும் குழந்தைகளின் ஈடுபாடு, பார்க்க அழகான ஒரு காட்சி. அந்நேரத்தில் வேறு இடையூறுகள் வந்தால், குழந்தைகளுக்கு ஏகப்பட்ட எரிச்சலும் கோபமும் வருவதையும் பார்த்து இரசித்திருக்கிறேன். கதைகள் மீது குழந்தைகளுக்கு உள்ள ஈர்ப்பினால்தானோ என்னவோ, உலகின் பல நாடுகளில் குழந்தைகளுக்கென கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஊடகஉலகில் கதைகளுக்குச் சிறப்பான இடம் உள்ளது. ஒவ்வொரு நாள் நிகழ்வுகளையும், செய்திகளையும் குறிப்பிட, அத்துறையில் பணிபுரிவோர் 'கதை' என்ற வார்த்தையையே அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆங்கில ஊடகங்களில் இவ்வார்த்தையின் பயன்பாடு அதிகம் உண்டு. அடிப்படையில், செய்திகளும், நாட்டு நடப்பும் கதை வடிவில் அமைவதையே ஊடகத் துறையினர் விரும்புகின்றனர். இதற்குக் இரு காரணங்களைக் கூறலாம்.... குழந்தைப் பருவம் முதல் கதைகள் மீது நாம் கொண்டுள்ள ஈடுபாட்டிலிருந்து நாம் விடுபடுவதில்லை என்பது முதல் காரணம். மனிதகுலம் வகுத்துள்ள மதம், மொழி, கலாச்சாரம் என்ற பல எல்லைகளைத் தாண்டி, விரைவில் பரவக்கூடிய சக்திபெற்றவை கதைகள் என்ற நம் நம்பிக்கை, இரண்டாவது காரணம்.

ஆர்வத்தைத் தூண்டும் ஆற்றல் மட்டுமல்ல, குணப்படுத்தும் ஆற்றலும் கதைகளுக்கு உண்டு என்பது பரவலான கருத்து. இசை, நாடகம், நடனம், ஓவியம் போன்ற கலைப் படைப்புக்கள் வழியாக, 'therapy' எனப்படும் குணமளிக்கும் வழிமுறைகள் உள்ளது போல், கதைகள் வழியாக Story therapy அல்லது, Narrative therapy என்ற குணப்படுத்தும் வழிமுறை உள்ளது. இது நமது 3வது எண்ணம்.
கதைகளுக்கு உள்ள சக்தியைப் பற்றிய இம்மூன்று எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொண்டதற்கு ஒரு காரணம் உண்டு. இயேசு ஏன் உவமைகளில் பேசினார் என்ற கேள்விக்கு சென்ற வாரம் நாம் பதில் தேட ஆரம்பித்தோம். அதன் தொடர்ச்சியாக இம்மூன்று எண்ணங்களை இங்கு பதிவு செய்துள்ளேன்.

கதைகள் நம்முள் உருவாக்கும் ஈடுபாடு, கதைகள் எல்லைகளைக் கடந்து, விரைவாகப் பரவக்கூடிய தன்மை, கதைகளுக்கு உள்ள குணப்படுத்தும் ஆற்றல் என்ற பல்வேறு காரணங்களால் இயேசு கதைகளை, உவமைகளைப் பயன்படுத்தினார் என்று சொல்ல முடியும். இயேசு தன் தொடுதலாலும், வார்த்தைகளாலும் மக்களை குணமாக்கினார் என்பதை நாம் அறிவோம். அவரது உவமைகள் வழியாகவும் அவர் நிச்சயம் பல்லாயிரம் மக்களை, அவர்களது மனக்காயங்களில் இருந்து குணமாக்கியிருப்பார் என்று நம்பலாம். இவை அனைத்தையும் விட, இயேசு ஏன் உவமைகள் வழியே கற்பித்தார் என்பதைப் புரிந்துகொள்ள, புகழ்பெற்ற ஆன்மீக வழிகாட்டி, Anthony de Melloவின் 'One Minute Wisdom' என்ற நூலில் காணப்படும் எளியதொரு கதை உதவியாக இருக்கும்:
குரு எப்போதும் கதைகளையேக் கூறிவந்தார். அவர் கூறிய கதைகள் சீடர்களுக்குப் பிடித்திருந்தன. இருந்தாலும், இன்னும் ஆழமான உண்மைகளை தங்கள் குரு கற்றுத் தரவேண்டும் என்று சீடர்கள் கேட்க ஆரம்பித்தனர். அவர்கள் என்னதான் வற்புறுத்திக் கேட்டாலும், குரு சொன்ன ஒரே பதில் இதுதான்: "மனிதர்களுக்கும், உண்மைக்கும் இடையே உள்ள சுருக்கமான வழி, கதையே. இதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை."

நமக்கும் உண்மைக்கும், நமக்கும் உண்மைக் கடவுளுக்கும் இடையே உள்ள சுருக்கமான வழி கதைகளே என்று இயேசு உணர்ந்ததால், அவர் உவமைகள் வழியே அந்த இறைவனை உலகிற்குக் கொண்டுவந்தார். மற்றொரு காரணம்... கதைகளுக்கு உள்ள ஆயுள்காலம். வெறும் தகவல்களாக, செய்திகளாக நம்மை அடையும் உண்மைகளின் ஆயுள்காலம் குறைவானதே. இதே உண்மைகள் கதை வடிவில் வெளிவரும்போது, அவை நீண்ட காலம் வாழும். இதோ, சில எடுத்துக்காட்டுகள்:

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தியப் பெருங்கடலில் உருவான சுனாமியைப் பற்றிய பல தகவல்களை நாம் தற்போது மறந்திருக்கலாம். அந்த சுனாமியை உருவாக்கிய நிலநடுக்கத்தின் சக்தி, ரிக்டர் அளவில், எவ்வளவு என்ற புள்ளிவிவரம், இந்த ஆழிப் பேரலையில் இறந்தோரின் எண்ணிக்கை, இதனால் ஏற்பட்ட மொத்தப் பொருள்சேதம் என்ற பல தகவல்களை நாம் தற்போது மறந்திருக்கலாம். ஒருவேளை, இன்னும் 50 ஆண்டுகள் சென்று, இச்சுனாமி ஏற்பட்ட அந்தக் குறிப்பிட்ட நாளும் மறந்து போகலாம்.
ஆனால், அந்தச் சுனாமியுடன் தொடர்பான கதைகள் பல இன்னும் உலகை வலம் வருகின்றன. நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் தன் பிறந்தநாளைக் கொண்டாட குடும்பத்தோடு கடற்கரைக்குச் சென்றார்... அப்போது வந்த ஆழிப் பேரலையில் அவரும், அவர் மனைவி சூடாமணியும் தங்கள் மூன்று குழந்தைகளையும் இழந்தனர்... ஆனால், அவர்கள் உருவாக்கிய ஓர் இல்லத்தில் 16 சிறுவர், சிறுமியர் இப்போது வளர்ந்து வருகின்றனர்.... இவர்கள் அனைவரும் சுனாமியில் தங்கள் பெற்றோரை இழந்தவர்கள்.... என்று நாம் நாளிதழ்களில் வாசித்த இந்தக் கதை, அதே நாளிதழ்களில் வெளியான பல தகவல்களை விட அதிக நாள் வாழ்ந்து வருகிறது.
இதோ, இன்னுமொரு எடுத்துக்காட்டு... 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான ஒரு ஹாலிவுட் திரைப்படம் 'The Impossible'. கிறிஸ்மஸ் விடுமுறைக்காகத் தாய்லாந்து சென்ற Maria Belon என்ற மருத்துவரின் குடும்பம் இதே ஆசிய சுனாமியில் சிக்கி, பிரிக்கப்பட்டப் பின்னர் ஒன்றிணையும் உண்மைக் கதை இது. இத்திரைப்படத்தின் Trailerல் வரும் ஓர் அழகிய வரி இது: “Nothing is more powerful than the human spirit”... "மனித உள்ளத்தைவிட சக்திவாய்ந்தது எதுவுமே இல்லை" என்பதை இந்த உண்மைக் கதை விளக்குகிறது. இக்குடும்பத்தின் கதையும் இன்னும் ஒரு சில ஆண்டுகளாவது வாழ்வது உறுதி.

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி நிகழ்ந்த ஆசிய சுனாமியின்போது வெளியான பல தகவல்களை நாம் மறந்திருக்கலாம். அதேபோல், 2011ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியோடு தொடர்புள்ள பல தகவல்களை நாம் மறந்திருக்கலாம். ஆனால், இவ்விரு இயற்கைப் பேரழிவுகளுடன் தொடர்புள்ள பல கதைகள் நம்மை மீண்டும், மீண்டும் வந்து சேருகின்றன. இக்கதைகளில் இடம்பெற்றவர்களின் பெயர்களும் காலப்போக்கில் மறக்கப்படலாம். ஊர், பெயர், காலம், என்ற பல தகவல் பதிவுகளையும் தாண்டி, ஒரு நிகழ்வு வாழும்போது அக்கதையை உவமை என்று சொல்லலாம்.

இயேசு கூறிய கதைகளிலும் பெயர்கள் பதிவு செய்யப்படவில்லை. இயேசு கூறிய அத்தனை உவமைகளிலும் ஏழை இலாசரும் பணக்காரரும் (லூக். 16: 19-31) என்ற ஒரே ஓர் உவமையில் மட்டும் ஏழைக்கு இலாசர் என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார் இயேசு. மற்ற உவமைகள் அனைத்திலும், தந்தை, இளைய மகன், மூத்த மகன், அரசன், குரு, ஒருவர், இருவர் என்று மட்டுமே குறிப்புகள் உள்ளன. எனவேதான், இந்த உவமைகள் காலங்களை, கலாச்சரங்களை, நாடுகளின் எல்லைகளை, மொழிகளைத் தாண்டி, இன்னும் நம்முடன் பயணிக்கின்றன. இந்தக் கதைகள் வாழும் வரைக்கும் நம் மத்தியில் நம்பிக்கையும், நல்லெண்ணங்களும் வாழும் என்பது உறுதி.

John Shea என்ற சிந்தனையாளர், 'கடவுளின் கதைகள்' (Stories of God) என்ற பிரபலமான நூலில் எழுதியுள்ள எண்ணம் சிந்திக்கக் கூடியது:
"மனித சக்தியின் எல்லைகளை நாம் அடையும்போது, நமது நன்னெறி கோட்பாடுகள் கேள்விக் குறியாகும்போது, நாம் தனிப்பட்ட ஒரு மனித முயற்சியை மேற்கொள்கிறோம். அதாவது, நாம் சுற்றி அமர்ந்து, கடவுளைப் பற்றிய கதைகள் சொல்கிறோம். இக்கதைகள் வழியே நம் அச்சங்களைக் களையவும், நம்பிக்கையை உயர்த்திப் பிடிக்கவும் முயல்கிறோம்."When we reach our limits, when our ordered worlds collapse, when we cannot enact our moral ideals, when we are disenchanted, we often enter into the awareness of Mystery. We are inescapably related this Mystery which is immanent and transcendent, which issues invitations we must respond to, which is ambiguous about its intentions, and which is real and important beyond all else. Our dwelling within Mystery is both menacing and promising, a relationship of exceeding darkness and undeserved light. In this situation with this awareness we do a distinctively human thing. We gather together and tell stories of God to calm our terror and hold our hope on high. (John Shea, Stories of God, p.39)
காலம் காலமாக மனித குலத்தைப் பயனுள்ள வகையில் பண்படுத்தி வந்துள்ள கதைகளின் சக்தியைப் பற்றி Matthew Fox என்ற எழுத்தாளர் கூறியுள்ள கருத்துக்களுடன் நமது இன்றையத் தேடலை நிறைவு செய்வோம்:

"'கதை சொல்வதில் உள்ள சக்தி' என்ற பாடத்தை, தொழில் புரட்சிக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த மக்களிடமிருந்து நாம் பயில முடியும். பழங்குடியினரிடையே இருந்த கல்வி முறையில் கதைகள் முக்கிய இடம்பெற்றன. Celtic என்ற பழங்குடியினர் சமுதாயத்தில், கவிஞர்கள் மட்டுமே ஆசிரியர்களாகப் பணியாற்ற வேண்டும் என்ற விதி, எழுதப்படாத பாரம்பரியமாக இருந்தது. ஏன்? மனித இதயத்தின் வழியாகச் செல்லாத அறிவு ஆபத்தானது. அது உண்மையான ஞானமாக இருக்கமுடியாது. இதயத்தைத் தொடாமல், அறிவுத் திறனை மட்டும் வளர்த்துக்கொள்ளும் இளையோரின் வாழ்வு மூச்சடைத்துப் போகும். நாம் வாழும் இன்றைய உலகில் கவிஞர்களும், கதை சொல்பவர்களும் நமது கல்வி முறைக்குப் பொறுப்பாளர்களாக இருந்தால், எத்தனை சீரான மாற்றங்கள் உருவாகும்?"

ஒரு கவிஞராக, கதை சொல்பவராக விளங்கிய இயேசு, தன் உவமைகள் வழியே நமக்குக் கல்வி புகட்டிச் சென்றுள்ளார். அவர் சொன்ன உவமைகள் வழியே நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும் என்பதைத் தொடர்ந்து தேடுவோம்.








All the contents on this site are copyrighted ©.