2013-01-29 15:42:20

நைஜீரியர்கள் மக்களாட்சி மீதான ஆர்வத்தை விட்டுவிடக் கூடாது, ஆயர் மத்யூ


சன.29,2013. நைஜீரியர்கள் மக்களாட்சி மீதான ஆர்வத்தை விட்டுவிடக் கூடாது என்று அந்நாட்டின் Sokoto ஆயர் Matthew Hassan Kukah கேட்டுக் கொண்டார்.
“தேசியக் கட்டமைப்பு : சவால்களும் உண்மைத்தன்மைகளும்” என்ற தலைப்பில் அபுஜாவில், “நம்பகமான தினத்தாள்கள் உரையாடல்” என்ற அமைப்பு நடத்திய கூட்டத்தில் உரையாற்றிய ஆயர் மத்யூ, தேசிய வரைபடத்தில் ஒரு நாடு இருந்தால் மட்டும் போதாது, மாறாக, அந்நாடு தேசிய அளவில் ஒன்றிணைந்த நாடாகக் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்று கூறினார்.
1960களின் தொடக்கத்தில் நைஜீரியாவை ஆட்சி செய்த பிரதமர் Alhaji Tafawa Balewa முதல், அந்நாட்டின் ஒவ்வொரு தலைவருமே ஏதோ ஒரு நிகழ்வினால் ஆட்சிக்கு வந்தவர்கள் எனவும், நாட்டின் வருங்காலத்துக்கு உறுதியளிக்கும் நல்ல தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டுமெனவும் ஆயர் கேட்டுக் கொண்டார்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் ஏறக்குறைய சம அளவில் இருக்கின்றனர். ஆயினும், இசுலாமிய சட்டத்தைப் புகுத்த விரும்பும் தீவிரவாதிகளால் கிறிஸ்தவ ஆலயங்களும் நிறுவனங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.
நைஜீரியாவில் எண்ணெய் போன்ற இயற்கை வளங்கள் அதிகமாக இருந்தும், அந்நாட்டின் 16 கோடியே 20 இலட்சம் மக்களில் ஏறக்குறைய 10 கோடிப் பேர் ஒரு நாளைக்கு ஒரு டாலருக்குக் குறைவான வருவாயில் வாழ்வதாகச் சொல்லப்படுகின்றது.







All the contents on this site are copyrighted ©.