2013-01-29 15:29:28

கற்றனைத்தூறும் வாஷிங்டனில் 'வெள்ளை இல்லம்'


அமெரிக்க அரசுத்தலைவர் இல்லம் 1800ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டபோது, அது 'அரசுத்தலைவர் இல்லம்' (President’s House) என்றே அழைக்கப்பட்டது. அவ்வில்லத்தில் முதலில் குடியேறிய அரசுத்தலைவர், ஜான் ஆடம்ஸ் (John Adams). அவ்வில்லத்திற்குச் சென்றதும், அரசுத்தலைவர் ஆடம்ஸ் தன் மனைவிக்குக் கடிதம் எழுதினார். "இந்த இல்லத்தின் மீதும், இங்கு வாழவிருப்போர் மீதும் விண்ணக ஆசீர் நிறைவாக இறங்க வேண்டுகிறேன். நேர்மையும், அறிவாற்றலும் உள்ளவர்கள் மட்டுமே இந்தக் கூரையின்கீழ் தங்கி ஆட்சி செய்யட்டும்." (I pray Heaven to bestow the best of blessings on this House, and all that shall hereafter inhabit it. May none but honest and wise men ever rule under this roof.) என்ற அழகான வரிகளை அக்கடிதத்தில் அவர் எழுதியிருந்தார்.
1812ம் ஆண்டு பிரித்தானியப் படை வாஷிங்டன் நகரைக் கைப்பற்றியதும், அந்நகரைத் தரைமட்டமாக்கும் நோக்கத்தில், அரசுத்தலைவர் இல்லத்தில் ஆரம்பித்து, அனைத்து கட்டிடங்களுக்கும் தீ வைத்தது. அந்நேரம் எழுந்த புயலாலும், மழையாலும் அந்நகரம் காப்பற்றப்பட்டதென்று சொல்லப்படுகிறது.
அமெரிக்கப் படையினர் மீண்டும் அந்நகரை கைப்பற்றியதும், தீயினால் புகைப்படிந்துப் போயிருந்த அரசுத்தலைவர் இல்லத்திற்கு முற்றிலும் வெள்ளை வண்ணம் பூசப்பட்டது. அன்று முதல், மக்கள் இதனை 'வெள்ளை இல்லம்' (White House) என்று அழைத்தனர். அமெரிக்க அரசுத் தலைவர் Theodore Roosevelt, 1901ம் ஆண்டு, 'வெள்ளை இல்லம்' என்ற பெயரையும், அவ்வில்லத்தின் படத்தையும் தன் அரசுக் கடிதங்களில் பதித்தார். அன்று முதல் அமெரிக்க அரசுத்தலைவரின் உறைவிடம், 'வெள்ளை இல்லம்' ('வெள்ளை மாளிகை') என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.