2013-01-29 15:32:56

அனைத்துலக நோயாளர் தினம் : செபம் செய்வதற்கான நல்ல வாய்ப்பு


சன.29,2013. லூர்து அன்னைத் திருவிழாவான வருகிற பிப்ரவரி 11ம் தேதியன்று சிறப்பிக்கப்படும் 21வது அனைத்துலக நோயாளர் தினத்திற்கான கருப்பொருள் மற்றும் அத்தினம் சிறப்பிக்கப்படும் விதம் குறித்து இச்செவ்வாயன்று நிருபர் கூட்டத்தில் விளக்கினார், திருப்பீட நலவாழ்வு அவைத் தலைவர் பேராயர் Zygmunt Zimowski.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் இந்த அனைத்துலக நோயாளர் தினத்தை ஏற்படுத்தியது குறித்து விளக்கிய பேராயர் Zimowski, ஒருவர் தனது துன்பங்களைத் திருஅவையின் நலனுக்காக ஒப்புக்கொடுக்கவும், செபிக்கவும், பிறரோடு பகிர்ந்து கொள்ளவும் இந்த அனைத்துலக நாள், நல்ல வாய்ப்பாக இருக்கின்றது என்று கூறினார்.
தனது வேதனகைள், மரணம் மற்றும் உயிர்ப்பினால் மனித சமுதாயத்துக்கு மீட்பைக் கொண்டுவந்த கிறிஸ்துவின் திருமுகத்தை, தங்களது துன்புறும் சகோதர சகோதரிகளில் காண்பதற்கும் இந்த அனைத்துலக நாள் நல்ல வாய்ப்பை வழங்குகின்றது என்றும் பேராயர் Zimowski தெரிவித்தார்.
இந்த அனைத்துலக நோயாளர் தினத்திற்கான திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் செய்தி ஏற்கனவே இம்மாதம் 8ம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் நல்ல சமாரியர்களாகச் செயல்படுமாறு அச்செய்தியில் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, நோயாளிகள்மீது அக்கறை காட்டுவதற்குக் கிறிஸ்தவர்களுக்குக் கடமை உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
21வது அனைத்துலக நோயாளர் தினம், ஜெர்மனியின் Altötting அன்னைமரித் திருத்தலத்தில் சிறப்பிக்கப்படவுள்ளது.







All the contents on this site are copyrighted ©.