2013-01-28 15:58:02

ஞாயிற்றுக்கிழமையை எவ்வாறு வாழ்கிறோம் என்பது குறித்து சிந்திக்க அழைக்கின்றார் திருத்தந்தை


சன.28,2013. ஓய்வு மற்றும் குடும்பத்தின் நாளான, அனைத்துக்கும் மேலாக, நம் ஆண்டவரின் நாளாக இருக்கும் ஞாயிற்றுக்கிழமையை நாம் எவ்வாறு வாழ்கிறோம் என்பது குறித்து சிந்திப்பதற்கு இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் நம்மை அழைக்கின்றது என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த ஏறத்தாழ முப்பதாயிரம் மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இயேசு தொழுகைக்கூடத்தில் எழுந்து சென்று இறைவாக்கினர் எசாயா சுருளேட்டிலிருந்து வாசித்த பின்னர், “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்று கூறி அமர்ந்ததைக் குறிப்பிட்டார்.
இந்நற்செய்தி வாசகம் நமக்கும் "இன்று" சவால் விடுக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, நம் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமையை நாம் எவ்வாறு வாழ்கிறோம் என்பது குறித்து முதலில், இந்த வாசகம் நம்மைச் சிந்திக்க வைக்கின்றது என்று கூறினார்.
ஆண்டவரின் திருவுடல், திருஇரத்தத்தினால் நாம் ஊட்டம்பெறும் திருநற்கருணையில் பங்கு கொண்டு வாழ வேண்டிய நம் ஆண்டவரின் நாள், மற்றும் இது குடும்பத்தின் நாள் என்றும், கூறினார் திருத்தந்தை.
கவனச்சிதறல்கள் நிறைந்த இக்காலத்தில் நமது செவிமடுக்கும் சக்தி குறித்து நம்மையே நாம் கேள்வி கேட்கவும் இந்நாள் அழைக்கின்றது என்ற திருத்தந்தை, கடவுளைப் பற்றிப் பேசுவதற்கு முன்னர் நம்மிடம் நம் ஆண்டவர் பேசுவதற்குச் செவிசாய்க்க வேண்டும், ஒவ்வொரு தருணமும் நமது மனமாற்றத்திற்கான நேரம் என அவர் சொல்கிறார் என்றுரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.