2013-01-28 16:18:10

சென்னை மயிலை உயர்மறை மாவட்டத்தின் நிர்வாகப் பொறுப்பை பேராயர் ஜார்ஜ் அன்டனிசாமி ஏற்பு


சன.28,2013. சென்னை மயிலை உயர்மறை மாவட்டத்தின் நிர்வாகப் பொறுப்பை பேராயர் ஜார்ஜ் அன்டனிசாமி இஞ்ஞாயிறு மாலை ஏற்றார்.
புனித தோமா பசிலிக்கா ஆலயத்திற்கு அருகே உள்ள புனித Bede பள்ளியின் திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், 20க்கும் அதிகமான ஆயர்களும், நூற்றுக்கணக்கான திருப்பணியாளர்களும், இருபால் துறவியரும், பல்லாயிரக்கணக்கான மக்களும் கலந்துகொண்டனர்.
சீரோ மலபார், சீரோ மலங்கரா ரீதித் திருஅவைகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்ட இந்த விழாவினை, இந்தியாவுக்கான திருப்பீடத் தூதர் Salvatore Pennacchio முன்னின்று நடத்தினார்.
புனித தோமா பசிலிக்காவிலிருந்து ஆயர்களும், குருக்களும் மேற்கொண்ட பவனி, பள்ளித் திடலை அடைந்தபின், பேராயர் Pennacchio திருத்தந்தையின் நியமன கடிதத்தை வாசித்தார்.
அதன்பின் நடைபெற்ற திருப்பலியில், புதிதாகப் பொறுப்பேற்ற பேராயர் ஜார்ஜ் அன்டனிசாமி தமிழிலும், ஆங்கிலத்திலும் மறையுரை நிகழ்த்தினார்.
திருப்பலிக்குப் பின் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் ஓய்வுபெற்றுச் செல்லும் பேராயர் மலையப்பன் சின்னப்பா அவர்களுக்குப் பிரியாவிடையும், புதியப் பேராயர் ஜார்ஜ் அன்டனிசாமி அவர்களுக்கு வரவேற்பும் வழங்கப்பட்டது.
1952ம் ஆண்டு திருச்சியில் பிறந்த பேராயர் ஜார்ஜ் அன்டனிசாமி அவர்கள், உரோம் நகரில் தன் உயர்கல்வியை முடித்தபின், 2005ம் ஆண்டு பேராயராகத் திருநிலைப் படுத்தப்பட்டு, Gambia, Liberia, Guinea, Sieraa Leone ஆகிய நாடுகளில் திருப்பீடத்தின் தூதராகப் பணிபுரிந்துள்ளார்.







All the contents on this site are copyrighted ©.