2013-01-28 15:47:52

கற்றனைத்தூறும்..... சிவப்பு அரிசி


அரிசியில் ஆயிரக்கணக்கான வகைகள் இருந்தாலும், சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய மூன்று வகை அரிசிகளைப் பற்றிய சுவாரசியமான பழங்கதைகள் உண்டு. “கடவுள் சிவா(ciwa) ஒரு பறவையைப் பூமிக்கு அனுப்பினார். அந்தப் பறவை, மஞ்சள், கறுப்பு, சிவப்பு, வெள்ளை ஆகிய நான்கு வகையான நெல் மணிகளைச் சுமந்து சென்றது. அது போகும் வழியில் மஞ்சள் அரிசியை தின்றுவிட்டது. மீதமுள்ள மூன்று வண்ண நெல்கள் மட்டுமே மனிதருக்கு கிடைத்தன”. இது இந்தோனேஷியாவின் பாலி தீவில் நிலவி வரும் ஒரு கதை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய யஜுர் வேதத்தில் மூவண்ண அரிசியின் மகிமை கூறப்பட்டுள்ளது. இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள் எனச் சொல்லப்படும் சரகர் கி.மு.700லும், சுஸ்ருதர் கி.மு.400லும் சிவப்பு அரிசியின் மருத்துவக் குணங்கள் குறித்து நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். சிவப்பு அரிசியில், எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள், இரும்புச்சத்து, துத்தநாகம், மக்னீஷியம், பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள், மிகுதியான நார்ச்சத்து போன்றவை அடங்கியிருக்கின்றன. Monacolin K என்கிற அற்புத வேதிப்பொருள் இதில் உள்ளது. Lovastatin என்ற பெயரில் இரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்கு இது கொடுக்கப்பட்டு வருகிறது. செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான்(Yeast), இந்த லோவாஸ்டேடினை உற்பத்தி செய்கிறது.
அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள். இதைத் தவிர, சர்க்கரை நோய், இரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் சிவப்பு அரிசி நல்ல மருந்து.
சீனாவில் ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. இந்தியா, ஜப்பான், கொரியா, பிலிப்பீன்ஸ், இலங்கை, ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
(நன்றி - www.facebook.com)







All the contents on this site are copyrighted ©.