2013-01-26 16:22:20

பதட்டநிலையில் இருக்கின்ற இரு கொரிய நாடுகளும் தங்களது போக்குகளை மாற்றுமாறு சமயத் தலைவர்கள் வேண்டுகோள்


சன.26,2013. வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே உச்சகட்டப் பதட்டநிலைகள் உருவாகியுள்ளவேளை, இவ்விரு நாடுகளும் தங்களது போக்குகளை மாற்றி ஒத்துழைப்பின் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்குமாறு தென் கொரிய தலத்திருஅவை அதிகாரி ஒருவர் வலியுறுத்தினார்.
வட கொரியாவுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொருளாதாரத் தடைகளில் தென் கொரியா பங்குபெற்றால், தென் கொரியாவுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக வட கொரியா அச்சுறுத்தியுள்ளதைத் தொடர்ந்து இவ்வாறு கேட்டுக் கொண்டார், பாப்பிறை மறைப்பணிக் கழகங்களின் தென் கொரிய தேசிய இயக்குனர் அருள்பணி John Bosco Byeon.
இரு கொரிய நாடுகளுக்கிடையேயான உறவுகள் உண்மையிலேயே பதட்டநிலையில் இருக்கின்றன என்றுரைத்த அருள்பணி John Bosco, தென் கொரிய புதிய அரசுத்தலைவர் இந்தப் பதட்டநிலைகளை அகற்றுவதற்குத் தகுந்த நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.
இதற்கிடையே, வட கொரியாவுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தடைகள் கடுமையாக்கப்பட்டதற்குப் பதில் நடவடிக்கையாக, மூன்றாவது அணுச் சோதனையையும், மேலும் ஏவுகணைச் சோதனைகளையும் நடத்தப்போவதாக வடகொரியா எச்சரித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.