2013-01-26 16:09:42

திருத்தந்தை : நம்பிக்கையின்மை, திருமணத்தின் நம்பகத்தன்மையைப் பாதிக்கக்கூடும்


சன.26,2013. குழந்தை பிறப்பு, திருமணப்பந்தம், திருமணத்தின் நம்பகத்தன்மை போன்ற திருமணத்தின் நன்மைகளை, நம்பிக்கையின்மைப் பாதிக்கக்கூடும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ரோமன் ரோட்டா என்ற கத்தோலிக்கத் திருஅவையின் திருமண விவகாரங்கள் குறித்த உச்சநீதிமன்றத்தின் புதிய ஆண்டு தொடக்கத்தையொட்டி அந்நீதிமன்றத்தின் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இந்த நம்பிக்கை ஆண்டில், நம்பிக்கைக்கும் திருமணத்திற்கும் இடையேயுள்ள உறவு குறித்த சில கூறுகளை எடுத்துரைக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
நம்பிக்கையின்மையில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனை, திருமணப்பந்தத்திலும் நெருக்கடியைக் கொண்டு வந்துள்ளது என்றுரைத்த திருத்தந்தை, இறைவனைப் புறக்கணித்து வாழ்வது, அனைத்து மனித உறவுகளிலும் ஆழமான தடுமாற்றத்திற்கு இட்டுச் செல்கின்றது என்றும் கூறினார்.
இக்காலத்திய பொருளிய, அறநெறிவாழ்விய மற்றும் மதம் குறித்த எண்ணங்களினால் தற்போதைய கலாச்சாரம், குடும்பங்களைக் கடும் சவால்களைச் சந்திக்க வைக்கின்றது, குறிப்பாக, தனிமனித சுதந்திரம் குறித்த வலுவான எண்ணங்களோடு போராடுபவர்கள், வாழ்வு முழுவதும் ஒன்றுசேர்ந்து வாழும் பிணைப்பு என்ற சவாலை எதிர்கொள்கின்றனர் என்றும் திருத்தந்தை கூறினார்.
மனிதர்கள் தனித்து வாழக்கூடியவர்களாக மாறி வருகின்றனர் மற்றும் எந்நேரத்திலும் முறிவுபடக்கூடும் என்ற உறவுகளால், மனிதர்கள் ஒருவர் மற்றவரோடு தொடர்பு கொள்கின்றனர் என்றும் உரைத்த திருத்தந்தை, கடவுளின் உண்மைக்குத் திறந்தவர்களாய் வாழும்போது மட்டுமே, திருமணம் மற்றும் குடும்பம் உட்பட, வாழ்வின் உண்மைத்தன்மையைப் புரிந்து அறியக் கூடியவர்களாய் வாழ இயலும் என்றும் ரோமன் ரோட்டா உறுப்பினர்களிடம் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.