2013-01-26 16:11:35

திருத்தந்தை : கிறிஸ்தவ ஒன்றிப்பு, விசுவாசத்தை அறிக்கையிடுவதற்கு மிகச் சிறந்த வழி


சன.26.2013. கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒப்புரவு, உரையாடல் மற்றும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
புனித பவுல் மனந்திரும்பிய விழாவான இவ்வெள்ளி மாலை உரோம் புனித பவுல் பசிலிக்காவில் திருப்புகழ்மாலை திருவழிபாடு நடத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, மறைப்பணிகளைப் பாதிக்கும் கிறிஸ்தவர்கள் மத்தியில் காணப்படும் பிரிவினைகளின் துர்மாதிரிகையே, கிறிஸ்தவ ஒன்றிப்பு வார நடவடிக்கைக்குக் காரணம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம் என்று கூறினார்.
கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தலைவரின் திருஆட்சிப்பீடப் பிரதிநிதிகள் மற்றும் ஆங்லிக்கன் சபைப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இவ்வழிபாட்டில் உரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்தவர்கள் மத்தியில் முழு ஒன்றிப்பை ஏற்படுத்துவது சக்திமிக்க சான்றாக இருக்கும், அத்துடன், நற்செய்தி அறிவிப்புப்பணிக்கும் தூண்டுகோலாக அமையும் என்று தெரிவித்தார்.
ஆன்மீகரீதியான கிறிஸ்தவ ஒன்றிப்பு மட்டும் போதாது, மாறாக, முழுமையான கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு, கடந்தகாலக் காயங்களினின்று குணமாகுவதற்கு உதவும் தனிமனித மனமாற்றம் தேவை என்பதையும் திருத்தந்தை வலியுறுத்தினார்.







All the contents on this site are copyrighted ©.