2013-01-26 16:17:59

ஐரோப்பிய மதத் தலைவர்கள் : ஐரோப்பாவில் அடிப்படையான பொருளாதார மாற்றம் தேவை


சன.26,2013. உலகில் மிகவும் கடன்பட்டுள்ள நாடுகளின் நியாயமற்ற கடன்கள் இரத்து செய்யப்பட வேண்டும், இன்னும், மிகப்பெரிய அளவில் கடன்கள் குவிந்துவிடுவதைத் தடுப்பதற்கு, நிதி அமைப்பைக் கட்டுக்குள் வைப்பது அவசியம் என்று பிரிட்டனின் பல்சமயத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஐரோப்பாவின் கடன் நெருக்கடிக்குத் தீர்வு வழங்கும் நோக்கத்தில், பிரிட்டனின் கத்தோலிக்க, ஆங்லிக்கன், மெத்தோடிஸ்ட் கிறிஸ்தவ சபையினர் உட்பட பிரிட்டனிலுள்ள இசுலாம், யூதம், இந்து, சீக், சொராஸ்ட்ரியம் ஆகிய மதங்களின் தலைவர்கள் என 300க்கும் அதிகமானப் பிரதிநிதிகள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐரோப்பாவில் கடன் குறித்த தணிக்கை நடத்தப்படுமாறும் கேட்டுள்ளனர்.
அநீதியான நிதி அமைப்பினால், பிரிட்டனிலும் உலகெங்கிலுமிருக்கின்ற மிகவும் வறிய மக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள் என்று இவ்வறிக்கை கூறுகிறது.
வருகிற பிப்ரவரி 5ம் தேதி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஜூபிலி கடன் என்ற நிகழ்வு இடம்பெற்ற பின்னர் இவ்வறிக்கை பிரிட்டன் பிரதமர் David Cameronடம் சமர்ப்பிக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.